மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூர் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு மறுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற மத்தியவங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்திருந்தது.
எனினும் சிங்கப்பூரின் சட்டங்களின் கீழ் இலங்கைக்கு அவரை நாடு கடத்த முடியாது என சிங்கப்பூரின் சட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலஞ்ச ஊழல் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கினை தொடர்ந்து 2025 பெப்ரவரி 25ம் திகதி முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்யுமாறு, கொழும்பு நிரந்தர ட்ரயல்-அட்-பார் பெஞ்ச் ஏற்கனவே, இன்டர்போல் மூலம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது அனுரகுமாரதிசநாயக்க அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு கொண்டுவருவேன் என தெரிவித்திருந்தார். இது தனது முன்னுரிமை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மத்திய வங்கி பிணைமுறி மோசடி நடைபெற்று இந்த பெப்ரவரி மாதம் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.