தமது இராணுவப் பிரிவான “அல்கஸ்ஸாம்” இன் சிரேஷ்ட தளபதிகளான பிரதான படைத் தளபதி முஹம்மத் தைப், பிரதித் தளபதி மர்வான் ஈஸா, ஆயுதப் பிரிவின் தளபதி காஸி அபூ தமா ஆ ,மனித வளப் பிரிவுக்கான தளபதி ரா இத் ஸாபித், கான் யூனுஸ் தளபதி ராபி ஸலாமா ,வடக்கு காஸாவின் தளபதி அஹ்மத் கன்தூர், மத்திய காஸா தளபதி அய்மன் நவ்பல் ஆகியோர் யுத்தத்தில் படுகொலையான செய்தியை ஹமாஸ் இயக்கம் உறுதிப்படுத்த தாமதமானது ஏன்?
கடந்த 15 மாதங்களாக நடைபெற்ற யுத்தத்தில் பொதுமக்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்ட அதே வேளையில், ஸமாஸினுடைய தரப்பிலும் அல்கஸ்ஸாம் படைப்பிரிவிலும் பலர் சஹீதாகியுள்ளனர்.
இந்நிலையில் யுத்த நிறுத்தம் உருவாகியுள்ள இக்காலப்பகுதியில், படுகொலைக்குள்ளான ஹமாஸினுடைய அல்கஸ்ஸாம் பிரிவின் முக்கிய தளபதிகள் பலர் படுகொலையான செய்தியை ஹமாஸ் அமைப்பு இதுவரை வெளிப்படுத்தாமலேயே இருந்தது.
எனினும் யுத்த நிறுத்தம் அமுலானதைத் தொடர்ந்து ,நேற்று முன்தினம் தன்னுடைய பிரதான தளபதிகள் பலர் களத்தில் வீர மரணமடைந்த செய்திகளை இப்போது ஹமாஸ் பகிரங்கமாக ஊர்ஜிதம் செய்துள்ளது.
இச்சூழ்நிலையில் ஹமாஸ் இயக்கமானது ஏன் இந்தளவு முக்கியமான இச் செய்திகளை இவ்வளவு நாட்களாக வெளிப்படுத்தாமல் தாமதப்படுத்தியது என்பதை இந்த ஆக்கம் தெளிவுபடுத்துகிறது.
முதலாவது: இத்தளபதிகள் அனைவரும் இதுவரை உயிருடன் இருக்கிறார்கள் என்ற யூகத்தில் இஸ்ரேல் இராணுவம் இவர்களைத் தொடர்ந்தும் துரத்தி வருகின்ற ஒரு சூழ்நிலையில், இவர்கள் அனைவரும் உயிரோடு இல்லை மரணித்து விட்டார்கள். இப்போது ஹமாஸினுடைய இராணுவ அணியை தலைமை தாங்கி நடாத்துவது புதிய தளபதிகள் தான் என்ற உண்மையை உலகுக்கு சொல்லவேண்டும் என்பதற்காகவே இச் செய்தி இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது:
ஹமாஸ் இயக்கமானது தொடர்ந்து யுத்தத்தை நடாத்துவதற்கான முழுத் திறன்களையும் கொண்டிருக்கிறது, அது யுத்த காலத்திலும் சரி பேச்சுவார்ததை மேசைகளிலும் சரி, மிகப்பலத்தோடும் வீரியத்தோடும் செயற்படுவதற்கான சகல ஆற்றலையும் பெற்ற அமைப்பாகவே இருக்கிறது.
எந்தவிதமான அடைவுகளையும் வெற்றிகளையும் பெற்றுக்கொள்ளாது தோல்வியை தழுவியிருக்கின்ற இஸ்ரேல் இராணுவத்திற்கு இச்சய்தியை ஹமாஸ் உரத்துச் சொல்ல விரும்புகிறது. அவ்வவ்போது வீர மரணமடைகின்ற இத் தலைவர்களுடைய மரணம் படையினரின் செயற்பாடுகளை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக, நூற்றுக்கணக்கான இளம் தளபதிகள், போர் வீர்ரகள் ஹமாஸ் இயக்கத்தில் தொடர்ந்தும் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்பதும் இதனுடைய மற்றுமொரு விளக்கமாகும்.
மிக முக்கியமான பலர் படுகொலையாகி விட்டார்கள் .எனவே மீண்டும் யுத்தத்தை தொடங்கி ஹமாஸை அழித்துவிடலாம் என்று நினைத்தால் அது சாத்தியமாகாது,மாறாக களத்திலே அவர்களை விடவும் பலமான தளபதிகளுடைய கட்டுப்பாட்டிலும் வழிகாட்டலிலும் ஹமாஸ் தொடர்ந்து இயங்கி வருகிறது என்பதும் ஹமாஸ் கூற வருகின்ற மற்றொரு செய்தியாகும்.
மூன்றாவது:
ஹமாஸ் இயக்கம் காசாவை நிர்வகிக்கக் கூடாது என்ற நோக்கில் அவர்களை இஸ்ரேல் படுகொலை செய்து வந்தது .ஆனால் இத்தகைய பெருந் தலைவர்கள் வீரமணத்தை தழுவிய பின்னர் புதிய தலைமைதான் இந்த காசாவை வழி நடாத்துகிறது.
அவர்கள் தான் பேச்சுவார்த்தை மேசைகளிலும் அமர்ந்திருக்கின்றார்கள், அவர்கள்தான் நெதன்யாகுவை மிகவும் அவமானத்திற்குட்படுத்தியுள்ள இப் பணயக் கைதிகளையும் விடுதலை செய்கின்றார்கள் என்பதும் இன்னொரு செய்தியாகும்.
நான்காவது:
இந்த வீரமரணச் செய்திகளை அறிவிப்பதற்கான பொருத்தமான சந்தர்ப்பமாக யுத்த நிறுத்த ஒப்பந்த காலமே
இருக்கிறது. அப்பொழுது தான் எல்லோரும் இச் செய்திகளை இலகுவாக தெரிந்து கொள்வார்கள் என்பது மற்றொரு செய்தியாகும்.
யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து வரவிருக்கின்ற அனைத்து விவகாரங்களும் இச் செய்திகளை மையப்படுத்தியதாகவே அமையவிருக்கிறது.
இறுதியாக, இஸ்ரேலுடன் கைகோர்த்து கொண்டுடிருக்கின்ற முஸ்லிம் நாட்டு தலைமைகளிடமும் ஒரு செய்தியை இதனூடாக ஹமாஸ் சொல்லியிருக்கிறது. அதுயாதெனில், ஹமாஸினுடைய தலைமையையும் ,அதன் முக்கியஸ்தர்களையும் அவை மிகவும் கேவலமாக விமர்சித்து வந்தன. அவர்கள் உல்லாச வாழ்க்கை வாழ்வதாகவும் அநியாயமாக அப்பாவி மக்கள் தான் யுத்தகளத்தில் இஸ்ரேலுடைய ஆயுதங்களுக்கு இரையாகுவதாகவும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தன.
ஆனால் ஹமாஸ் இயக்கத்தின் தலைமைகள் எப்போதும் களத்திலேயே இருக்கிறார்கள், அவர்கள் தான் போருக்குத் தலைமை தாங்குகின்றார்கள், அவர்கள் தான் எப்போதும் முன்னணியில் இருக்கின்றார்கள், அவர்கள் ஒருபோதும் பின்வாங்கிச் செல்பவர்கள் அல்லர், அவர்கள் வரலாற்றுக்கு தமது வீரமரணத்தை சான்றாக வைத்துத் தான் இப் போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்கிறார்கள்.
மாறாக அவர்கள் பூமிக்கு கீழாக சுரங்கங்களுக்குள் மறைந்து கோழைகளாக போராட்டத்திலிருந்து ஒருபோதும் ஒதுங்கியிருக்கவில்லை என்ற உறுதியான செய்தியையும் இதனூடாக ஹமாஸ் சொல்லியிருக்கிறது.