குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நடைபெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கொழும்பு, பத்தரமுல்லைக்கு விசேட பஸ் சேவை இன்று முதல் இரவு வேளைகளில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு முன்பாக அண்மைய நாட்களாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகியிருந்தது.
அதிகாலை முதலே நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும், பலர் அதிகாலை நான்கு மணிக்கே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக வந்து வரிசையில் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று முதல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் 24 மணி நேரமும் இடம்பெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதற்கு ஏற்றவகையில் தேவையான பணியாளர்களை சுழற்சி முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.