இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் சனிக்கிழமை விடுதலை செய்ய உள்ளது.
போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது.
33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. பணயக் கைதிகள் 33 பேரில் சிலர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
6 வார போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 24 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக இதுவரை பாலஸ்தீனியர்கள் 1,099 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
காசாவில் இன்னும் 73 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் வரும் சனிக்கிழமை விடுதலை செய்கிறது.
மேலும், தங்கள் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடல்களையும் ஹமாஸ் ஆயுதக்குழு வரும் வியாழக்கிழமை இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது.
இதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்கிறது. மேலும், காசாவுக்குள் தற்காலிக தங்கும் குடியிருப்புகள், கனரக வானங்களையும் அனுமதிக்கிறது.