பலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு சனிக்கிழமை வரை காலக்கெடு வழங்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் மீண்டும் காசாவில் போர் விஸ்வரூபம் எடுக்க உள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளதோடு, இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் போரில் களமிறங்குகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி போராக மாறியது.
இந்த போர் என்பது கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்தது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதலை தொடங்கின.
இதில் சுமார் 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அதேபோல் இலட்சக்கணக்கானவர்கள் காசாவில் இருந்து வெளியேறி உள்ளனர். தற்போது இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி காசாவில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்ததத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் ஹமாஸ் வைத்துள்ள மொத்தமுள்ள 99 பணயக் கைதிகளில் 33 பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
அதேபோல் சிறைகளில் உள்ள 737 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும் ஆகியவை தான் முக்கிய அம்சமாக உள்ளது.
கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் இந்த ஒப்பந்த்தின் அடிப்படையில் தான் போர் நிறுத்தம் என்பது அமலுக்கு வந்தது.
இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுகிறது. இதனால் மறு அறிவிப்பு வரும்வரை இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிப்பதை நிறுத்துகிறோம் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டென்ஷனாகி உள்ளார். இந்நிலையில் தான் ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை ஒன்றை செய்துள்ளார்.
இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியின் ஓவல் அலுவலகத்தில் டொனால்ட் ட்ரம்ப் நேற்று கூறியதாவது:
காசாவில் உள்ள ஜனாதிபதி கைதிகள் அனைவரையும் வரும் சனிக்கிழமை மதியத்துக்குள் இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது முடிவுக்கு கொண்டு வரப்படும்.
அதோடு மோசமான நிலை உருவாகும். நரகம் உருவாக்கப்படும். ’’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ஹமாசுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் பதிலடி கொடுக்க போகிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு டிரம்ப், ‛‛நான் என்ன சொல்கிறேன் என்பதை ஹமாஸ் உணர்ந்து கொள்வார்கள். நீங்களும் உள் அர்த்தத்தை கண்டுபிடிப்பீர்கள்’’ என்று கூறினார்.
இதனால் ஹமாஸ் இஸ்ரேல் நாட்டின் அனைத்து பணயக் கைதிகளையும் வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால் இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா காசாவில் களமிறங்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது நடக்கும் பட்சத்தில் காசாவில் போர் பதற்றம் என்பது உச்சமடையும். அதோடு காசாவின் அழிவு என்பது பெரிய அளவில் இருக்கும். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.