உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? சவூதியில் அமெரிக்கா – ரஷ்யா பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Date:

 உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 3வது ஆண்டை நெருங்கும் இந்த போரை நிறுத்த ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.

அதன்படி அமெரிக்கா மற்றும் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று சவூதி அரேபியாவில் நடத்திய பேச்சுவார்த்தையில் இருநாடுகள் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு உயர்மட்ட குழு அமைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர் தொடங்கியது. 3 ஆண்டை நெருங்கும் நிலையிலும் போர் நீடிக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதும் இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுப்பேன் என்று அறிவித்தார். தற்போது அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகியுள்ளார். இதையடுத்து போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன், டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியிலும் பேசினார். அப்போது ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இருதலைவர்களும் பேசினர். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா- ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று நடந்தது.

இந்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா, ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ரியாத் நகருக்கு சென்றனர்.

ரஷ்யா சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜனாதிபதி விளாடிமிர் புதினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அமெரிக்கா சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, டொனால்ட் ட்ரம்பின் தேசிய ஆலோசகர் மைக் வால்ட்ஸ், மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோர் சென்றிருந்தனர்.

இதுபற்றி ரஷ்ய ஜனாதிபதி கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,” அமெரிக்க- ரஷ்ய இடையிலான உறவுகளை மீட்டெடுப்பது, உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண்பது ஆகியவை பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறும்” என்றார். இதையடுத்து இன்று அமெரிக்கா – ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகளின் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

உக்ரைன் போர் நடவடிக்கையால் ரஷ்யா – அமெரிக்கா இடையேயான உறவு துண்டிக்கப்பட்ட நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இருநாடுகளையும் ஒன்றிணைய வைத்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது போர் நிறுத்தம் தொடர்பான நடவடிக்கையை முன்னெடுக்க தனித்தனியாக உயர்மட்ட அளவிலான குழுக்கள் அமைக்க ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டது.

அதன்படி ரஷ்யா மற்றும் அமெரிக்கா சார்பில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையி்ல், ‛‛ 3 முக்கிய விஷயங்களுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

மாஸ்கோ, வாஷிங்டனில் உள்ள அமெரிக்கா, ரஷ்யாவின் தூதரங்களில் அதிகாரிகள் நியமனம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு உயர்மட்ட அளவில் குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்கா உடன் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. அமெரிக்கா சார்பில் உக்ரைனுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. இது உக்ரைனை அதிருப்தியடைய வைத்திருந்தது.

இதுபற்றி நேற்று உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்து இருந்தார்.

அப்போது அவர், ”சவூதியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்குபெற உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. உக்ரைன் அதிகாரிகள் இல்லாமல் நடக்கும் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் பலனளிக்காது. பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகளையும் ஏற்கமாட்டோம்” என்றார்.

அதேநேரத்தில் சவூதி அரேபியாவுக்கு நாளை உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி செல்ல உள்ளார். அவர் தனது மனைவியுடன் அங்கு செல்கிறார். இந்த பயணம் கடந்த வாரமே முடிவு செய்யப்பட்டது.

இது அவரது தனிப்பட்ட பயணமாகும். இந்த பயணத்தின்போது அவர் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா தலைவர்களை சந்திக்க மாட்டார் என்று உக்ரைன் அறிவித்துள்ளது. இதனால் இன்று அமெரிக்கா – ரஷ்ய அதிகாரிகள் பேசி போர் நிறுத்தம் தொடர்பாக ஏதேனும் முடிவு செய்தால் அதனை உக்ரைன் ஏற்குமா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் தற்போது ரஷ்யா, அமெரிக்கா சார்பில் போரை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தைக்கு உயர்மட்ட குழுக்களை தான் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவை சேர்ந்தவர்கள் உக்ரைனுடன் பேச வாய்ப்புள்ளது என்பதால் விரைவில் போர் நிறுத்தம் என்பது அமலுக்கு வரலாம்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...