காசாவில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றிரும் அதேநேரம் காசாவில் இருந்து ஒருபோதும் வெளியேறுவதில்லை என்று பலஸ்தீனர்கள் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியாகி வரும் நிலையில், இதனை எதிர்ப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரஸ், காசாவில் இனச்சுத்திகரிப்புக்கு எதிராகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் நெதன்யாகுவுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியபோதே ட்ரம்ப் கடந்த செவ்வாயன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். காசாவில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றி அந்தப் பகுதியை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அபிவிருத்தி செய்வதாக ட்ரம்ப் கூறினார்.
இந்த சூழ்நிலையில் மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் இடம்பெயர்ந்து கூடாரத்தில் வசித்து வரும் 36 வயது வசாயிப் அப்தல் என்ற பெண் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு கூறியதாவது,
நடந்தாலும் நானும் எனது தாயும் காசாவில் இருந்து ஒருபோதும் வெளியேற மாட்டோம். வடக்கில் எமது அழிக்கப்பட்ட வீட்டுக்கு திரும்புவதற்கு மாத்திரமே நாம் அனைவரும் தற்போது காத்திருக்கிறோம் என்றார்.
ஆறு குழுந்தைகளின் தந்தையான இமாத் அல் கஸ்ஸாஸ், டெயிர் அல் பலாவின் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து நகர மையப் பகுதியில் கூடாரத்தில் வசித்து வருகிறார். ட்ரம்பின் அறிவிப்புக்கு உறுதியாக பதில் அளித்த அவர், ‘அது சாத்தியம் இல்லை’ என்றார்.
‘இந்தப் போரில் எத்தனை அழிவுகள், உயிரிழப்புகள் இடம்பெற்றபோதும் இது நடக்காத ஒன்று. எல்லைகள் திறக்கப்பட்டு குடியேற்றத்திற்கு வாய்ப்பு அழிக்கப்பட்டாலும் கூட நான் வெளியேற மாட்டேன்’ என்று அவர் உறுதியாகக் குறிப்பிட்டார்.
‘நிலத்தை ஒப்படைக்கும் ஒரு மன்னனைப் போன்று ட்ரம்ப் பேசுகிறார். அவர் தனது இஸ்ரேலிய நண்பர்களை பலஸ்தீனத்திற் வெளியே மீளக் குடியமர்த்தி காசாவை தனியே விட்டுவிட்டால் நல்லது’ என்று கான் யூனிஸைச் சேர்ந்த 72 வயது அபூ அல் சயீத் குறிப்பிட்டார்.
இதேவேளை சவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகள் ட்ரம்பின் திட்டத்தை கடுமையாக நிராகரித்துள்ளன. ‘எமது மக்களின் உரிமைகள் மீறப்படுவதை அனுமதிக்க மாட்டோம்’ என்று சாடிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், காசா பலஸ்தீன நாட்டின் ஒரு பகுதி என்றும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது சர்வதேச சட்டத்தை மோசமாக மீறுவதாக இருக்கும் என்றும் எச்சரித்தார்.
ட்ரம்பின் இந்தத் திட்டத்திற்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, சீனா, மலேசியா, பிரேசில் என உலகின் பல நாடுகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.