காசாவில் ‘பாலஸ்தீன ரிவியரா’வை உருவாக்க வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த ஸயோனிஸவாத யோசனையை அரபுலகம் முற்றாக நிராகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த வாரம், அமெரிக்கா காசா பகுதியை ‘கையகப்படுத்தும்’ என்றும், அங்கு வசிக்கும் சுமார் இரண்டு மில்லியன் பலஸ்தீனியர்களை எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளுக்கு குடியமர்த்த வேண்டும் என்றும், அப் பகுதியை ‘மத்திய கிழக்கின் ரிவியரா’வாக மறுவடிவமைக்கும் என்றும் அகங்காரமாக கூறியிருந்தார்.
ட்ரம்பின் இத் திட்டம் சர்வதேச அளவில் குறிப்பாக அரபுலகில் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியது. ‘இது பலஸ்தீன மக்களுக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த மாநிலத்திற்கு எதிராகவோ இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல’ என்று குவைத்தின் ஐ.நா. தூதர் தாரிக் அல் பன்னாய் கூறினார்.
‘அரபு நாடுகளான நாங்கள் ஒரு ரிவியராவை – சுதந்திரமான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பலஸ்தீன மாநிலத்தில் காண விரும்புகிறோம்.’
பாலஸ்தீன சமூகத்தைப் பொறுத்தவரை, கட்டாய இடமாற்றம் என்ற கருத்து, 1948 இல் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டபோது அவர்கள் அனுபவித்த நக்பாவின் நினைவுகளை மீண்டும் கொண்டுவந்துள்ளது.
‘என்ன நடந்தாலும் பலஸ்தீன மக்களுக்கு இழப்பை உண்டாக்கும் விடயங்களை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். காசா பகுதியிலும் மேற்குக் கரையிலும் கொல்லப்பட்டவர்களுக்காக, அடிப்படையில், போதுமானதை விட நாங்கள் அதிகமாகவே விலை கொடுத்துள்ளோம் என்று பலஸ்தீனுக்கான ஐ.நா. தூதர் ரியாத் மன்சூர் கூறினார்.
மேற்குக் கரையில் ‘ஆபத்தான இஸ்ரேலிய விரிவாக்க ஆக்கிரமிப்பை’ பற்றி அல் பன்னாய் கூறும் போது , அத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் ‘உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்தார்.
உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தம்; காசாவின் அனைத்துப் பகுதிகளிலும் பாலஸ்தீன பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களுக்குத் திரும்புதல் குறித்த தீர்மானத்தினை நிலைநிறுத்தி செயல்படுத்துமாறு 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலை அவர் மேலும் வலியுறுத்தினார்.
மனிதாபிமான உதவிகளை பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் விநியோகிப்பது; மற்றும் காசா பகுதியில் மக்கள்தொகை அல்லது பிராந்திய மாற்றத்திற்கான எந்தவொரு முயற்சியையும் நிராகரிப்பது குறித்தும் அவர் வலியுறூத்தினார்.
இதேவேளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பிராந்திய நாடுகள், இஸ்ரேலுடன் இணைந்த ஒரு பலஸ்தீன அரசை உருவாக்க வேண்டும் என பலமுறை அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .