உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த ஜனவரி 27 நள்ளிரவு, மகா கும்பமேளாவில் நெரிசல் ஏற்பட்டது. இதற்கு அடுத்த நாள் கும்பமேளாவுக்கு வந்தவர்கள் காவல் நிலையங்களில் தஞ்சம் கேட்டு குவியத் தொடங்கினர்.
இதைப் பார்த்த அந்நகர முஸ்லிம்கள் அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். இதில், முஸ்லிம்களின் நிர்வாகப் பள்ளியான யாத்கார் ஹுசைனி இண்டர் காலேஜின் வளாகம் திறந்துவிடப்பட்டது. இங்கு கும்பமேளாவுக்கு வந்தவர்கள் தங்க அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு குளிருக்கான கம்பளிகளும், போர்வைகளும் வழங்கப்பட்டன. மூன்று வேளை உணவும் முஸ்லிம்கள் சார்பில் விநியோகிக்கப்பட்டது.
இதேபோல், முஸ்லிம்களின் மார்க்கெட் கட்டிடங்களின் வளாகத்திலும் கும்பமேளாவினருக்கு தங்கும் வசதி செய்யப்பட்டது. இவர்களில் சிலரை முஸ்லிம்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.
இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பிரயாக்ராஜின் மும்தாஜ் மஹாலில் வசிக்கும் மன்சூர் உஸ்மானி கூறும்போது, ‘‘அனைவருக்கும் சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டன. இதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் கும்பமேளா சமயங்களில் தவறாமல் நடைபெறுகிறது. இதை பிரயாக்ராஜின் முஸ்லிம்கள் தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே கருதி செய்து வருகின்றனர்’’ என்றார்.
ஒவ்வொரு கும்பமேளாவிலும் நடத்தப்படும் உணவு விடுதிகள் உள்ளிட்ட கடைகளை முஸ்லிம்களும் நடத்தி வந்தனர்.
இந்த வருடம் மகா கும்பமேளாவில் இந்து அல்லாதவர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என துறவிகளின் அகாடாக்கள் வலியுறுத்தி இருந்தன.
சனாதனத்தை மதிப்பவர்களுக்கு மட்டுமே மகா கும்பமேளாவில் அனுமதி என்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.