தற்போதைய அரசு ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ என்ற திட்டத்தின் மூலம் நமது நாடு எல்லா துறைகளிலும் தூய்மைப்படுத்தப்படுவதை இலக்காக கொண்டுள்ளது. அந்தவகையில் ஒழுக்க மேம்பாட்டில் கவனம் செலுத்துவது இத்திட்டம் வெற்றியடைய அவசியமானதாகும்.
துரதிஷ்டவசமாக அன்றாடம் பாடசாலைகளிலிருந்து வருகின்ற செய்திகள் கவலைக்குரியதாக இருக்கின்றன. மாணவர்கள் மத்தியில் பரவிப் போயிருக்கின்ற ஒழுக்க சீர்கேடுகள் சில நேரங்களில் ஆசிரியர்களும் சம்பந்தப்படுகின்ற நிகழ்வுகளாக மாறி ஒரு பெரும் பிரச்சினையாக மாறியிருக்கின்றது.
எனவே இதுபோன்ற சுதந்திர தின நிகழ்வில் நாம் இப்பிரச்சினைகளை பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். இந்த விடயத்தில் உலமாக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ அனீஸ் வேண்டுகோள் விடுத்தார்.
77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் காசிமிய்யாவில் நடைபெற்ற பாதை திறப்பு விழாவும் சுதந்திரதின நிகழ்வும், மறைந்த அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் தொடர்பான நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்லூரியின் தற்போதைய அதிபர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளை காசிமிய்யா நிர்வாகம் பழைய மாணவர் சங்கம், மாவட்ட சர்வமத அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இறுதியாக நடந்த நினைவேந்தல் நிகழ்வின் போது சர்வமத தலைவர்கள் அப்துல்லாஹ் ஹஸரத்தின் நினைவுகளை மீட்டியதோடு அனனாரின் அரும்பெரும் பணிகளை நினைவு கூர்ந்தனர்.
காசிமிய்யாவின் அதிபராகவும் சர்வமத அமைப்பின் இணைத் தலைவராகவும் மாவட்ட உலமா சபையின் தலைவராகவும் இருந்த அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் நினைவாக மாவட்ட சர்வமத அமைப்பின் சார்பில் அன்னாரின் குடும்பத்தார் முன்னிலையில் நினைவுச்சின்னமும் கையளிக்கப்பட்டது. இதன் வாசகங்களை செயற்குழு உறுப்பினர் ஏ.சி.எம். ருமைஸ் வாசித்தார்.
சிறப்பான இந்நிகழ்வுகளில் ஊர் பிரமுகர்கள், சர்வமத தலைவர்கள், காசிமிய்யா பழைய மாணவர்கள் Casmo அமைப்பின் பிரதிநிதிகள் பஹன மீடியாவின் பணிப்பாளர் அஷ்ஷெயக் அப்துல் முஜீப், அமேசன் கல்லூரி பணிப்பாளர் எஸ்எ.ம். இல்ஹாம் மரிக்கார், புத்தளம் பெரிய பள்ளிவாசல் முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், உலமா சபை நகரக்கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அஷ்ஷெய்க் ரிஸ்மி ஆதம்பிள்ளை இம்மூன்று நிகழ்வுகளையும் நெறிப்படுத்தினார்.