அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுவதாகவும், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்த விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடைகளை விதித்து டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றம் என்பது உலகில் நடக்கும் போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது.
தற்போதைய சூழலில் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மற்றும் காசா மீதான போர் நடவடிக்கையால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடைகளை விதிக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் கூட்டாளியான இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இது சட்டவிரோதமானது. அதோடு அடிப்படை ஆதாரமின்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்கிறது என்று கூறி இந்த தடை உத்தரவை டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.
இந்த தடை உத்தரவின்படி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கான நிதி மற்றும் விசா விவகாரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. இதன் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத நிலை உருவாகும்.
டொனால்ட் ட்ரம்பின் இந்த உத்தரவின் பின்னணியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளார்.
அதாவது இஸ்ரேல் கடந்த 15 மாதமாக பலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக காசாவில் போர் புரிந்து வந்தது.
கடந்த மாதம் இந்த போர் என்பது ஒப்பந்தம் மூலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
காசாவில் இனப்படுகொலை செய்வதாக பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டது. இதனை இஸ்ரேல் ஏற்க மறுத்துவிட்டது.
இந்த விவகாரத்தில் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்த நாாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது அமெரிக்கா தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜோ பைடன் அரசு எதிர்ப்பை பதிவு செய்த நிலையில் டொனால்ட் டிரம்ப் சர்வதேச நீதிமன்றத்துக்கே தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு என்பது கடந்த 4ம் தேதி அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பை, பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு வெளியாகி உள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது டொனால்ட் ட்ரம்ப் இப்படி தடைகளை விதிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு அதாவது டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்தபோதும் தடைகளை விதித்துள்ளார்.
தற்போது இந்த சர்வதேச நீதிமன்றத்தை 125 நாடுகள் அங்கீகரித்து உறுப்பினர்களாக உள்ளன. வரும் காலத்தில் 34 நாடுகள் இந்த நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக சேர உள்ளனர். ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்டவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடாக இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.