கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் குமார சமரரத்னவின் சடலத்தை கோருவதற்கு உறவினர்கள் எவரும் முன்வரவில்லை.
இதனையடுத்து, அவரது சடலம் கொழும்பு பொலிஸ் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களின் உரிமை கோரலுக்காக காத்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ நேற்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இலக்கம் 05 நீதிவான் நீதிமன்ற அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், சட்ட நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் 19 கொலை வழக்குகளில் சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற வளாகத்தினுள் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.