இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய ஷூரா சபை அனைத்து இலங்கையர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
எமது தேசம் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற சவால்களையும் வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளையும், ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகால காலனித்துவ ஆதிக்கத்தையும் எதிர்கொண்டுள்ளது.
ஆயினும், தன்னம்பிக்கையும் தேசபக்தியும் எம்மை சுதந்திரத்தையும் முன்னேற்றத்தையும் நோக்கி வழிகாட்டியுள்ளன.
சமூக-பொருளாதார, மனிதவள அபிவிருத்தி துறைகளில் பாராட்டத்தக்க மைல் கற்களை இலங்கை எட்டியுள்ள போதிலும், ஊழல், தவறான நிருவாகம், முறைகேடுகள் என்பவற்றால் அது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தமையானது அதன் மறுசீரமைப்பிற்கான உடனடியான அவசியத்தை உணர்த்தும் வலிமிகுந்த நினைவூட்டலாகும்.
அரசியல் நிர்வாகத் துறைகளில் ஊழல், சட்டம் ஒழுங்கு இன்மை, இனவாதம், இஸ்லாத்தை பற்றி திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட பீதி (Islamophobia) மற்றும் தேசிய விவகாரங்களை குழப்பும் வகையில் செயல்படும், வெளியில் தென்படாத, உத்தியோகப்பட்டற்ற ஆழ் அரசாங்கத்தின் (Deep State) செயற்பாடுகள் ஆகியவை இன்று நாடு எதிர்நோக்கும் முக்கிய சவால்களாக உள்ளன.
இலங்கை முஸ்லிம்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் கலாசார வளர்ச்சியில் தமக்கேயுரிய பாணியில் பங்களிப்புச் செய்து அமைதியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
ஆழமாக வேரூன்றிய தேசபக்திமிக்க சமூகமாக திகழும் அவர்கள் இந்த நாட்டின் அரசியல், பொருளாதார சுதந்திரத்திற்கு எப்போதும் துணை நின்றிருக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர்கள் செய்திருப்பினும் அவர்களுக்கு பல மனக் குறைகள் உள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு கோரத் தாக்குதலின் சோக நிகழ்வுகள், அவற்றைத் தொடர்ந்து அப்பாவி முஸ்லிம்களும் முஸ்லிம் அமைப்புக்களும் பழிவாங்கப்பட்டமை போன்றன அப்படியான அநீதிகளுக்கு சில உதாரணங்களாகும்.
நாட்டை பிளவுபடுத்தி, அதன் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்த முனைந்த சக்திகளால் இவை திட்டமிடப்பட்டன. மேலும், கொவிட்-19 பெருந்தொற்றின் போது இறந்த முஸ்லிம்களது ஜனாஸாக்கள் அவர்களது நம்பிக்கைக்கு விரோதமாக தகனம் செய்யப்பட்டமையும், வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிகழ்வுகளும் எமது சமூகத்தின் காயங்களை மேலும் ஆழப்படுத்திய கொடுமையான செயல்களாகும்.
நீதி நிலைநாட்டப்பட்டு விஷமிகளால் உருவாக்கப்பட்ட ஓட்டைகளை அடைப்பதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தினால் மாத்திரமே உண்மையான சுதந்திரக் காற்றை மக்களால் சுவாசிக்க முடியும்.
அனைத்து சமூகங்களின் ஆணையைப் பெற்று ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கம், இந்த நாசகார சக்திகளை இல்லாதொழிப்பதன் மூலம் அமைதியை வளர்த்து, தூய இலங்கை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற திட்டங்கள் மூலம் இலங்கையை நிலையான சுபீட்சத்தை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஷூரா சபையானது, இந்த புனிதமான இலக்குகளை அடைவதற்காகவும், அனைவருக்கும் நீதியான, சகலரையும் அரவணைத்த மற்றும் செழிப்பான இலங்கையை உருவாக்குவதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளதுடன், அதன் பங்கினை வகிக்கத் தயாராக உள்ளது.