பங்களாதேஷில் அவாமி லீக்கை தடை செய்யக் கோரி, டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் இல்லத்தை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி, தீ வைத்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆன்லைன் வாயிலாக உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
பங்களாதேஷில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி எழுந்த மாணவர்கள் போராட்டத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.
பங்களாதேஷை விட்டு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறி 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அவர் மீது மட்டும் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மேலும், அவாமி லீக் அரசாங்கத்திற்கு எதிராக இனப் படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் எனக் கூறி டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஷேக் ஹசினா மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளதை அடுத்து, அவரை விசாரிக்க வேண்டும் என பங்களாதேஷ் இடைக்கால அரசு கூறி வருவதுடன், அவருக்கு எதிராக நீதிமன்றங்களில் கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி பங்களாதேஷ் இடைக்கால அரசு கோரிக்கை வைத்து வருகிறது.
பங்களாதேஷ் பொதுத்தேர்தல் இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது 2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ நடைபெறலாம் என்ற சூழல் உள்ளது. பங்களாதேஷில் நடைபெற இருக்கும் பொதுத் தோ்தலில் போட்டியிட, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்பட மாட்டாது என்று இடைக்கால அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது.
இந்நிலையில், அவாமி லீக்கின் தற்போது கலைக்கப்பட்ட மாணவர் பிரிவான சத்ரா லீக், ஷேக் ஹசீனா ஆன்லைன் வாயிலாக உரை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தது.
அதன்படி நேற்று இரவு (5) ஷேக் ஹசீனா உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. தற்போதைய ஆட்சிக்கு எதிராக ஒரு எதிர்ப்பை பதிவு செய்ய நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தகவல் பரவியது.
முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா நேரலையாக ஆன்லைனில் உரையாற்ற இருப்பதாக தகவல் பரவிய நிலையில், போராட்டக்காரர்கள் குழுவினர், டாக்காவில் உள்ள அவரது வீட்டை சேதப்படுத்தி தீ வைத்தனர். பல போராட்டக்காரர்கள் வீட்டின் இரண்டாவது மாடியில் ஏறி, கடப்பாரைகள் மற்றும் மரக் கட்டைகளைப் பயன்படுத்தி ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர்.
பங்களாதேஷின் தந்தை என்று போற்றப்படுபவர் மறைந்த முன்னாள் பிரதமர் முஜிபுர் ரஹ்மான். 1970 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் நடந்த பொதுத் தேர்தலில், ஷேக் முஜிப்பின் அவாமி லீக் கட்சி, அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் வென்றது.
அந்த கிழக்கு பாகிஸ்தான் தான் பின்னர் வங்கதேசமாக மாறியது. முஜிபுர் ரஹ்மான் ஏப்ரல் 1971 முதல் தமது அரசியல் வாழ்க்கை முழுவதும், படுகொலை செய்யப்படும் வரை வங்கதேசத்தின் பிரதமராக பணியாற்றினார்.
அவரது இல்லத்தைச் சுற்றி வளைத்துத் தாக்கிய பங்களாதேஷ இராணுவ வீரர்கள் குழுவால் படுகொலை செய்யப்பட்டார். முஜிபுர் ரஹ்மானின் கர்ப்பிணி மருமகள் உட்பட அங்கிருந்த அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டனர்.
இந்தத் தாக்குதலின் போது, அவரது மகளான ஷேக் ஹசீனா வெளிநாட்டில் இருந்தார். அடுத்த ஆறு வருடங்கள் வெளிநாட்டில் அடைக்கலம் புகுந்திருந்த ஷேக் ஹசீனா, பின்னர் தனது தந்தை உருவாக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கிற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 15 ஆண்டுகாலம் பங்களாதேஷின் பிரதமராகவும் பதவி வகித்தார்.