கடுமையான நிமோனியா பாதிப்பால் அவதிப்படும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்
உயிர் தப்ப வாய்ப்பில்லை என எச்சரிக்கப்பட்டதை அடுத்து வத்திக்கானில் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வத்திக்கானில் பாப்பரசரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்கும் சுவிஸ் படைகள் அவரது இறுதி சடங்குகளை ஒத்திகை பார்த்து வருவதுடன், போப்பாண்டவரின் மரணச்சடங்கு தொடர்பிலான தயாரிப்புகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனை அருகே கத்தோலிக்க மக்கள் திரண்டு வருவதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால், வத்திக்கானில் உள்ள சுவிஸ் படைகளின் தலைவர் Christian Kühne மொத்த தகவல்களையும் மறுத்துள்ளதுடன், சுவிஸ் படைகள் வழக்கமான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை முதல் ரோம் நகரில் அமைந்துள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் குறித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திங்கட்கிழமை வத்திக்கான் நிர்வாகம் அவரது நிலை குறித்து விளக்கமளித்திருந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவருக்கு இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் போப்பாண்டவருக்கு நெருக்கமான இருவர், இம்முறை தப்புவது கடினம் என்று பிரான்சிஸ் தங்களிடம் கூறியதாகக் கூறியுள்ளனர்.
மேலும் கடுமையான வலியால் போப் பிரான்சிஸ் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரத்திற்கான போப்பின் அனைத்து அலுவல்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது திகதி மாற்றப்பட்டுள்ளது. மேலும் போப் தனது நுரையீரலின் ஒரு பகுதியை சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றியிருந்தார்.
இதனால் அவர் குறிப்பாக நுரையீரல் நிலைமைகளால் பாதிக்கப்படக்கூடியவர். இந்த நிலையில், அவரது இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.