நேற்று, 2025.01.31, கள்-எலிய அல்-மஸ்ஜிதுஸ் ஸுப்ஹானியில், ஜும்மா தொழுகையின் பின்னர் ஒரு அறிவித்தல் வாசிக்கப்படுகிறது.
“எமது பள்ளிவாசலுக்கு முன்னால், இன்று காலை ஜனாசா சேவைக்கு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனமொன்று அதன் திறப்புடன், கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
அத்தோடு பதிவுத் தபாலில் வாகனத்துக்குரிய ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. மேலும் அத்தோடு ஒரு கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
அதிலே, இந்த வாகனத்தை பள்ளிவாசலுக்கு வக்ஃப் (பொதுச் சொத்தாக தர்மம்) செய்வதாகவும் – வாகனத்தைப் பயன்படுத்த வேண்டிய நிபந்தனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன” என்று அக்கடிதம் ஊரவர்களுக்கு வாசித்து காண்பிக்கப்பட்டது.
இதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது, இந்த ஸதகாவைச் செய்தவர்/கள் யார் என்பதை எவருக்கும் தெரியாமல் ரகசியமாக செய்திருப்பது தான்.
“நிழல் இல்லாத மறுமை நாளில், அல்லாஹுத்தஆலா 07 கூட்டத்தாருக்கு தனது அர்ஷின் கீழ் நிழல் கொடுப்பான்” என்று நபிகளார் சொன்ன ஏழு கூட்டத்தாரில் ஒருவர் “வலக்கரம் செய்த தர்மத்தை இடக்கரம்கூட அறியாமல் மிக இரகசியமாக தர்மம் செய்தவர்”.
புகழ், பெயர், .பாராட்டு என்ற எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி இக்காலத்தில் செலவு செய்பவர்களை காண்பது அரிது. தமது மூதாதையர் செய்த வக்ஃப் சொத்துக்களைக் கூட சுயநலத்துக்காகப் பயன்படுத்த எத்தனிப்போர் பற்றி கேள்விப்படும் நாட்கள் இவை.
அந்த வகையில், ரகசியமாகச் செய்யப்பட்ட இந்த பெரும் தர்மத்திற்கு அல்லாஹுத்தஆலா ஈருலகிலும் மேலான கூலியை வழங்குவானாக.
நன்றி :
அஷ்.இஸ்மத் அலி