சமூகத்தில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்திற்கு புறம்பான கொலைகள் ஒரு தீர்வாகாது என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினாலே குற்றங்களை கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
2025பெப்ரவரி 19ம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குள் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார், சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்தவேளை அவர் கொல்லப்பட்டார்.
அதன் பின்னர் 21ம் திகதி இரவு இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரின் காவலில் இருந்தவேளை சுட்டுக்கொல்லப்பட்டனர், பொலிஸாருடனான மோதல் ஒன்றின் போதே இவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது, அன்றிரவு கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற கொலையுடன் அவர்களிற்கு தொடர்பிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள சம்பவங்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆழ்ந்த கவலையை வெளியிடுகின்றது.
சட்ட அமுலாக்கல் அதிகாரிகளான பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும், இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் இவ்வாறான என்கவுன்டர் கொலைகள் இடம்பெற்றுள்ளன உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை என்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
சமூகத்தில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்திற்கு புறம்பான் கொலைகள் ஒரு தீர்வாக அமையாது என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினாலே குற்றங்களைகட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பொலிஸாரினால் கொழும்பில் எவ்வாறு இருவர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து பதில் பொலிஸ்மா அதிபர் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் என்கவுன்டனர் கொலைகள் பொலிஸ் நிலையத்தில் கொலைகள் போன்ற பாரதூரமான சம்பவங்கள் மீண்டும் நிகழாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொலிஸ் நிலைய கொலைகள், என்கவுன்டர் கொலைகள் சமூகத்திலிருந்து முற்றாக அகற்றப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த கலாச்சாரத்திற்கு காரணமான பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கும் நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் இது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது.