போப் பிரான்சிஸ் அவர்களின் நுரையீரல் இரண்டிலும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் சிக்கலானதாக இருப்பதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.
88 வயதான போப் பிரான்சிஸ் உடல்நல குறைவு காரணமாக கடந்த 14ம் தேதி இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது நுரையீரல்கள் இரண்டிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் நீடித்த நிலையில் சிடி ஸ்கேனில் நிமோனியா கண்டறியப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸின் உடல் நிலை சற்று சிக்கலாக இருப்பதாகவும், இருப்பினும் அவர் செய்தித்தாள் படிப்பதாகவும், பிரார்த்தனையில் ஈடுபடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் நலம் விரும்பிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்து, “அவருக்காக ஜெபிக்கும்படி” கேட்டுக் கொண்டாகவும் வத்திக்கான் குறிப்பிட்டது.
கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன், போப் பல நாட்களுக்கு மூச்சுக்குழாய் ஒவ்வாமை அறிகுறிகளைக் கொண்டிருந்தார்.
அவர், 2025 கத்தோலிக்க புனித ஆண்டிற்கான வார இறுதியில் பல நிகழ்வுகளை வழிநடத்தவிருந்தார்.
எனினும், போப்பின் நாட்காட்டியில் உள்ள அனைத்து பொது நிகழ்வுகளும் ஞாயிற்றுக்கிழமை வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் 12 ஆண்டுகளில் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.