இன, மத, பேதமின்றி போராடிய எம் முன்னோர்களின் தியாகங்களை வாழ்வில் எடுத்து நடக்க வேண்டும்: ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் சுதந்திர தின செய்தி

Date:

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் செய்தி!

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என கி.பி. 1597 இல் இருந்து சுமார் 350 வருடங்கள் காலனித்துவத்தின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திர தேசமாக 1948 இல் மாற்றம் பெற்று இவ்வருடம் 77ஆவது சுதந்திர தினத்தை ஞாபகப்படுத்தும் வேளையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இச்செய்தியை வெளியிடுகிறது.

காலனித்துவத்தின் கீழ் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இன, மத, மொழி, பேதமின்றி போராடிய எம் முன்னோர்களின் ஒற்றுமை, வீரம், விடாமுயற்சி, தேசப்பற்று மற்றும் தியாகங்கள் நினைவுகூரப்படுவதுடன் தேசிய வீரர்களான அவர்களது சிறப்பியல்புகளை இந்நாட்டுப் பிரஜைகள் வாழ்வில் எடுத்து நடக்க வேண்டும்.

நம்மை நாம் ஆளுவது ஜனநாயகம். ஆனால் யார் ஆட்சி செய்தாலும் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதே முழுமையான சுதந்திரம். எமது மூதாதையர் பெற்றுத் தந்த சுதந்திரம் நாட்டில் பிறந்த, பிறக்கும், பிரஜாவுரிமையுள்ள அனைவருக்குமானதாகும் என்பதை நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வருடம் ஒன்று கடக்க சுதந்திரம் கிடைத்த ஆண்டுகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கும். இதனால் கிடைக்கும் மகிழ்ச்சியை விடவும் எந்தச் சமூகத்துக்கோ, இனத்துக்கோ அல்லது பிரஜைக்கோ எதிரான அடக்குமுறைகளோ, தேசத்தின் வளங்களின் அபகரிப்புகளோ இல்லாது ஒவ்வொரு சமூகமும் முறையான சமய, சமூக, அரசியல், பொருளீட்டல் உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கு தேசத்தவர்கள் அனைவரும் ஒத்தாசையாக இருப்பதே உண்மையான மகிழ்ச்சியும் சுதந்திரமும் ஆகும்.

சில நாடுகள் ஏதாவதொரு வளத்தை மாத்திரம் பயன்படுத்தி அபிவிருத்தி அடைந்த, வளர்ந்த நாடுகளாக முன்னணியில் உள்ளன. ஆனால் எல்லா வளங்களையும் கொண்ட நம் நாடு தரமற்ற நடத்தைகளால் ஏனைய நாடுகளிடம் தங்கிநிற்கும் நிலையில் இருப்பது சுதந்திரமில்லாத சுதந்திரமே.

நாட்டு மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒற்றுமை, சமாதானம், சகோதரத்துவத்துடன் நாட்டின் பன்முக அபிவிருத்தி, சமூக நலன்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள், பாதுகாப்பான நாடுகள், வாழத் தகுதியான நாடுகள் போன்ற உயர்தரம் கொண்ட நாடுகளில் ஒன்றாக எமது நாடும் அமைய நாம் எல்லோரும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும்.

எமது முன்னோர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை நாம் முழுமையாக அனுபவிக்க வேண்டுமெனில் முதலில் ஒழுக்க விழுமியம், பண்பாட்டு எழுச்சி என்பன ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும்.

புதிய தலைமுறை மகிழ்ச்சி, ஆரோக்கியம், திறன், நாட்டுப்பற்றுள்ள நற்பிரஜைகளைக் கொண்டதாக என்றென்றும் வாழ்ந்திட வல்ல அல்லாஹு தஆலா அருள்புரிய வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இந்த 77ஆவது மகிழ்ச்சிகரமான சுதந்திர தினத்தில் பிரார்த்திக்கின்றது.

Popular

More like this
Related

புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் 50,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப்...

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...