இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். செகேரியன், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை நேற்று முன்தினம் (25) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
1956ஆம் ஆண்டு முதல் ஆரம்பமாகி நீண்டகாலமாகக் காணப்படும் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்துச் சுட்டிக்காட்டிய ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.செகேரியன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்த ரஷ்யா உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ரஷ்யா அண்மையில் வழங்கிய உர நன்கொடை உள்ளிட்ட தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு துறைகளில் பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.