இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 77 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை ஒட்டியதான இஸ்லாமிய சமய நிகழ்வுகள் இன்று கொழும்பு வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
“தேசிய மறுமலர்ச்சிக்காய் ஒன்றிணைவோம்” என்ற மகுடம் தாங்கி இம்முறை தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி ஸாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூரமித் முஸ்லிம் சமய வாழ்த்துரையை வழங்கினார். ஜம்இய்யாவின் பிரதிநிதிகளாக ஆலிம்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, உதவிப் பணிப்பாளர்களான என்.நிலோபர் மற்றும் எம்.எஸ். அலா அஹமத் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முப்தி முர்சி, வக்ஃப் நியாய சபை பதில் செயலாளர் எம்.என்.எம். ரோஸன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், கிராஅத் வெள்ளவத்தை ஜும்ஆப்பள்ளிவாசல் பேஸ்இமாம் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.சியாம் (ரஷாதி) வழங்கியதோடு, வரவேற்புரையை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், விசேட துஆப்பிரார்த்தனை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூரமித் மற்றும் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி ஸாலி தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் ஆகியோர் உரையாற்றியதோடு, வெள்ளவத்தை ஜும்ஆப்பள்ளிவாசல் உதவிச் செயலாளர் அல்ஹாஜ் எம்.எம். இர்பான் நன்றியுரை நிகழ்த்தினார்.
வெள்ளத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் முஹம்மத் ரிஸ்வி உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள், ஏனைய பள்ளிவாசல்களைச் சேர்ந்த நிர்வாக சபை பிரதிநிதிகளும் வந்திருந்தனர்.
ஆலிம்கள், அரசியல் தலைவர்கள், அதிதிகள் மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப் பயிற்றுவிப்பாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான இஸ்பஹான் சஹாப்தீன் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.