அநுர அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (25) மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.
இன்று மாலை 6 மணியளவில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் காலை 09.30க்கு ஆரம்பமாகி 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 06.00 வரை 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஏழாவது நாளாக நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை 06.00க்கு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை, இரண்டாவது வாசிப்பிற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதியமைச்சராக பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன்படி, பெப்ரவரி 18ஆம் திகதி முதல் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இன்று அதன் இறுதி நாளாகும்.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பைத் தொடர்ந்து, குழு நிலை விவாதம் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.