ஔரங்கசீப் கல்லறை சர்ச்சை: நாக்பூரில் வெடித்த வன்முறை; 3வது நாளாக தொடரும் 144 தடை உத்தரவு

Date:

மகாராஷ்டிரா மாநிலம் குல்தாபாத்தில் உள்ள முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் கல்லறையை இடித்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஔரங்கசீப் கல்லறை விவகாரத்தில் வன்முறை வெடித்த நாக்பூர் நகரில் இன்று 3வது நாளாக 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் கல்லறை, மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில் இருக்கிறது.

இது ஒரு சுற்றுலா தலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அண்மையில் ஷாவா என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம், மராத்திய மன்னர் சிவாஜியின் மகன் சம்பாஜியின் வாழ்க்கையை விவரிக்கிறது.

இதில் சிவாஜியின் மகன் சம்பாஜியை ஔரங்கசீப் கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது மராத்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் மகாராஷ்டிரா சட்டசபையில் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி, ஔரங்கசீப்பை புகழ்ந்து பேசினார்.

இங்கிருந்துதான் சர்ச்சையே வெடித்தது. மராத்தியர்களுக்கு எதிராக, மராத்தியர்களை அடிமைப்படுத்திய ஔரங்கசீப் கல்லறையை மகாராஷ்டிரா மண்ணில் இருந்து அகற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதனால் மகாராஷ்டிரா முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே நாக்பூரில், முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனை, ஔரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் எரித்துவிட்டதாக வதந்தி பரவியது.

இதனால் நாக்பூரில் மிகப் பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறிய நிலையில், சாலையில் இருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர்.

வன்முறை கும்பலை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தி கலைத்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் 15 பொலிஸார் உட்பட 20 பேர் காயமடைந்ததாகவும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனையடுத்து நாக்பூரில் கடந்த 3 நாட்களாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்றும் தொடர்ந்து வருகிறது.

இந்த பின்னணியில், ஔரங்கசீப் கல்லறையை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

மேலும் ஔரங்கசீப் கல்லறையை மகாராஷ்டிரா அரசு அகற்ற வேண்டும்;  அப்படி அகற்றும் போது முஸ்லிம்களின் வாக்குகளுக்காக அரசியல் செய்கிற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரையும் அழைத்துவர வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா தெரிவித்துள்ளது.

ஔரங்கசீப் கல்லறை விவகாரம், மகாராஷ்டிராவில் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

ஔரங்கசீப் கல்லறையை இடிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகள் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து கல்லறை இருக்கும் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...