இலங்கைக்கு மத நூல்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானதென புத்தசாசன மத கலாசார அலுவல்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத நூல்கள் மற்றும் மதங்கள் சார்ந்த பிரசுரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சும் இந்த தடையை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் பிரதியமைச்சர் கமகெதர திசாநாயக்கவினால் கருத்து வெளியிடப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த விடயம் தொடர்பில் பிரதி அமைச்சரிடம் ‘நியூஸ்நவ்‘ வினவிய போது,
இலங்கையில் மத நூல்களை இறக்குமதி செய்வதற்கான தடை குறித்து இந்த நாட்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் தடை நீக்குவதாக எந்த அறிவித்தலும் வெளியிடப்படவில்லை எனவும், ஆனால் சில ஊடகங்கள் இதனை தவறாக பிரசுரித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த தடையை நீக்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் சில மேற்பார்வையின் கீழ் தணிக்கை நீக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இஸ்லாம் மத நூல்களை நாட்டிற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத்தடையை நீக்குமாறு இலங்கையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்தாலும், சவூதி அரேபியாவில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பல நூல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.