இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் ஆறு மாதங்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும்!

Date:

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 25 வீதமானவை ஆறு மாதங்களுக்குள் பதிவுசெய்யப்படாவிட்டால் இறக்குமதிக்கான அனுமதி இரத்துச் செய்யப்படும் என்று அரசாங்க நிதி பற்றிய குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய வழங்கப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் வழமைக்குத் திரும்பச் செய்யும் நோக்கிலும், நாட்டின் பொருளாதார நிலைப்புத் தன்மையைப் பாதுகாத்து மேம்படுத்துதல், அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கும் அதேநேரம், தேவையற்ற வாகன இருப்புக்கள் பேணப்படுதல், அதிகப்படியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை அதைரியப்படுத்தும் நோக்கிலேயே இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதற்கு அமைய, இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 90 நாட்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும்.

மேலும், யாராவது ஒரு இறக்குமதியாளரினால் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் 25 வீதமானவை ஆறு மாதங்களுக்குள் பதிவுசெய்யப்படாவிட்டால் குறித்த இறக்குமதியாளருக்கு வழங்கப்பட்ட அனுமதி இரத்துச் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிவுசெய்யப்படாத வாகனங்களுக்கு ஆகக் கூடியது 45 வீதம் வரையில் விதிக்கக் கூடியதாக 3 வீத தண்டப்பணம் அறவிடப்படும்.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ. த சில்வா தலைமையில் கடந்த 04 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடியபோதே அதிகாரிகள் இந்தத் தகவல்களை முன்வைத்தனர்.

இக்கூட்டத்தில் 1969 ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2421/04 மற்றும் 2421/44 ஆகிய இலக்க வர்த்ததமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

மேலும், தனிநபர் ஒருவர் வாகனமொன்றை இறக்குமதி செய்வதாயின் ஒரு வாகனத்தை மாத்திரம் இறக்குமதி செய்ய முடியும் என்றும், வணிக ரீதியில் மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளுக்கு அவ்வாறான மட்டுப்பாடு இல்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், உள்நாட்டு இலத்திரனியல் வாகனத் துறையினைப் பாதுகாப்பதற்கான கொள்கைக்கான ஆதரவைக் கோருவது பற்றியும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு பிணை வசதிகளைப் பயன்படுத்தும் உள்நாட்டுத் தயாரிப்பாளர்களுக்கு சுங்க இறக்குமதி வரி மற்றும் மிகைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வது குறித்த முன்மொழிவு சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...