காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் நடவடிக்கையில் 12,300க்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழந்துள்ளதாக காசா கணக்கிட்டுள்ளது.
காசாவில் 12,000 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் கைது செய்யப்பட்டும் இன்னும் பல லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இது மனிதகுலத்திற்கு ஒரு மிகப்பெரும் களங்கமாகும்’ என்று ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
பலஸ்தீன பெண்களின் மனநிலை, உளவியல் மற்றும் உடல் ரீதியான கடும் பாதிப்புக்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் இது அனைத்தும் சர்வதேச விதிமுறைகள் மற்றும் ஒப்பந்தங்களுக்கு எதிரானதாகும் என்று ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், பலஸ்தீன பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மேற்கொள்ளும் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது’ என்று ஹமாஸ் கூறியுள்ளது.
இதேவேளை காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை நிரந்தர ஊனமுற்றவர்களாக மாற்றியுள்ளது என்று காசா ஊடக அலுவலகத் தலைவர் சர்வதேச மகளிர் தினத்தன்று தெரிவித்தார்.
“காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு, குறிப்பாக இஸ்ரேலின் தொடர்ச்சியான இனப்படுகொலை பிரசாரத்தின் பின்னணியில், எண்ணற்ற பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையில் மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
“காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை 2,000 பெண்கள் மற்றும் சிறுமிகளை உடல் உறுப்புகளை இழந்ததன் காரணமாக நிரந்தரமாக ஊனமுற்றவர்களாக ஆக்கியுள்ளது, 162 பெண்கள் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் பலர் தடுப்பு மையங்களில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக ஊடக அலுவலகத் தலைவர் தெரிவித்தார்.
13,901 பெண்கள் விதவைகளாகி தங்கள் குடும்பங்களுக்கு ஒரே குடும்பத்தலைவியாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 17,000 தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இழந்துள்ளார்கள். 50,000 கர்ப்பிணிப் பெண்கள் மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் தங்கள் குழந்தைகளை இழந்துள்ளனர்.
ஜனவரி 18 வரை காசாவில் காணாமல் போன 14,222 பேரில் 70% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் அறிக்கைகள் காட்டுகின்றன.
ஜனவரி 19 முதல் காசாவில் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது, இது இஸ்ரேலின் மிருகத்தனமான போரை நிறுத்தியது. இதில் 48,400 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.