உலக முஸ்லிம்கள் பெருமைப்படும் “ஷஹாதா கலிமாவை”ச் சுமந்த சவூதி அரேபியாவின் தேசியக்கொடி “திருக்கலிமா மூலம் உலக முஸ்லிம்களை சவூதி கண்ணியப்படுத்தியுள்ளது”

Date:

சவூதி அரேபியாவின் தேசிய கொடி தினம் (11.03.2025) இன்றாகும். இத்தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.

உலகில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. அவற்றில் 193 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வொரு நாடும் தமக்கென தனித்துவமான தேசியக் கொடியைக் கொண்டிருக்கின்றன.

அனைத்து நாடுகளதும் தேசியக் கொடிகள் ஐ.நா. தலைமையகத்தில் பறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பறக்க விடப்பட்டிருக்கும் கொடிகளில் “லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்ற ஏகத்துவ திருக்கலிமாவை சவூதி அரேபியாவின் தேசிய கொடி கொண்டிருக்கிறது.

இஸ்லாமிய இறைத்தூதின் அடித்தளமாக விளங்கும் திருக்கலிமாவை தங்களுடைய தேசியக் கொடியாகப் பிரகடனப்படுத்தியதன் ஊடாக இஸ்லாத்தையும் உலக முஸ்லிம்களையும் சவுதி பெருமைப்படுத்தி இருக்கிறது. இதனை முன்னிட்டு உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை அடைய முடியும்.

இவ்வாறு சிறப்புற்று விளங்கும் தேசியக் கொடியை சவூதி அரேபியா பிரகடனப்படுத்திய நாள் தான் தேசிய கொடி தினமாக அனுஷ்டிக்கிறது.

சவூதி அரேபிய மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துர் ரஹ்மான் ஆல் ஸஊத் தான் இத்தினத்தைப் பிரகடனப்படுத்தினார்.

திருக்கலிமாவை தங்களுடைய தேசியக் கொடியாக பிரகடனப்படுத்தியது சவூதி அரேபியாவுக்கு மாத்திரமல்ல உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் மதிப்பும் மரியாதையும் பெருமைக்குமுரிய விடயமும் ஆகும்.

ஏனெனில் இக்கலிமாவை உலகிலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் நாவால் மொழிந்து மனதால் உறுதிபட ஏற்று இக்கலிமா எதைப் போதிக்கிறதோ அதன் படி வாழ்ந்து வருகின்றனர். இக்கலிமாவுக்காக தன்னுயிரைக் கூட தூச்சமாக மதித்து முஸ்லிம்கள் வாழுகின்றனர்.

இப்படிப்பட்ட திருக்கலிமாவை தங்களது நாட்டின் யாப்பின் பிரதான அம்சமாகவும் தங்களது நாட்டின் தேசியக் கொடியாகவும் ஆக்கிய சவுதியை இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலக முஸ்லிம்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.

“லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்ற இம்மகத்துவமிக்க திருக்கலிமா பொதிந்த கொடியை உலகில் எவரும் அசிங்கப்படுத்த முடியாது. எந்த ஒரு முஸ்லிமும் அதை செய்ய முன்வரவும் மாட்டான்.

இக்கலிமா ஒவ்வொரு முஸ்லிம்களுடைய உள்ளத்திலும் மதிப்பும் மரியாதையும் பெற்றதாக உள்ளது. இக்கலிமாவுக்காக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும் உழைத்துள்ளார்கள். மக்களின் இம்மை மறுமை வாழ்வின் சுபீட்சமே இக்கலிமாவின் இலக்கு ஆகும்.

இக்கலிமா குறித்து ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சிறு வயது முதல் உரிய முறையில் சொல்லிக் கொடுக்கப்பட்டு அதன் பிரகாரம் அவர்களை வாழ வழியமைக்கப்படுகிறது.

லாஇலாஹ இல்லல்லாஹ் என்பது வணக்கத்திற்குத் தகுதியான நாயன் அல்லாஹ்வைத் தவிர இவ்வுலகில் வேறு யாரும் இல்லை என்ற அந்த கோட்பாட்டை அனைவரும் முழு மனதோடு ஏற்றிருக்கிறார்கள்.

உண்மையான இறைவணக்கம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செலுத்தப்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதார நம்பி இருக்கிறார்கள். திருக்கலிமா ஒவ்வொருவரையும் சிறந்த ஒரு புனிதனாக மாற்றுவதற்கு வழி வகுக்கிறது.

இக்கலிமாவின் பிரகாரம் ஒருவர் தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்வார் என்றால் நிச்சயம் அம்மனிதர் ஈருலகிலும் வெற்றி பெற்றவராவார். இக்கலிமா மறுமையில் நிச்சயம் ஒவ்வொருவரையும் பாதுகாக்கும். உன்னதாமான சுவர்க்கம் வரை அது மனிதனைக் கொண்டு சேர்க்கும்.

இக்கலிமாவின் இரண்டாவது பகுதி லாயிலாஹ இல்லல்லாஹ்வுக்கு பிறகுவரும் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்பதாகும். முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பது நபி (ஸல்) அவர்களை நபியாக, அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக்கொள்ளும் ஈமானாகும். இதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதார ஏற்று நபி (ஸல்) அவர்கள் எதை போதித்தார்களோ அப்போதனைகளின் பிரகாரம் வாழ்வதைக் குறிக்ககும்.

சவூதி  அரேபியாவின் ஒற்றுமை, கண்ணியம், முஸ்லிம்களின் கண்ணியம் ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு தேசிய சின்னம் தான் சவூதி கொடி. இது ஒற்றுமையின் சின்னம். இக்கலிமாவின் நிழலில் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு ஒன்றுபட்டுள்ளனர். ஒருபோதும் மறைக்கப்படாத பெருமையின் அடையாளம் இது.

சவூதியின் கொடி சவுதியின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதப்படுகிறது.
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற திருக்கலிமா முஸ்லிம்களின் பிரதானமான ஒரு வார்த்தையாக இருக்கும் அதேவேளை, இத்திருக் கலிமாவை சவூதி அரேபியா தங்களுடைய தேசியக்கொடியாக பிரகடனப்படுத்தி கலிமாவின் பக்கம் மக்களை அழைத்து அதன் பிரகாரம் மக்களை வாழ வழிவகுத்து அக்கலிமாவை உலக அளவில் மக்களுக்கும் போதித்து கலிமாவுக்கு மிகப்பெரிய ஒரு அந்தஸ்தையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது. இதன் பெருமை மன்னர் அப்துல் அஸீஸையே சாரும்.

சவூதி அரேபியாவின் மூலம் உலக முஸ்லிம்கள் கௌரவிக்கப்படும் ஒரு ஒரு நாளாக இக் கொடி தினம் அமைந்துள்ளது.

இத்திருக் கலிமாவை தங்களுடைய தேசியக் கொடியாக ஏற்று வானளவில் அதை பறக்க விட்டு உலக முஸ்லிம்களை கண்ணியப்படுத்தும் சவூதி அரேபியா உலக முஸ்லிம்களின் மதிப்பையும் கண்ணியத்தையும் பெற்றுக் கொள்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறு தனித்துவமான பணியை மேற்கொண்ட சவூதி அரேபியாவை நாமும் பாராட்டுகிறோம்.

குறிப்பாக இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் ஸல்மான் ஆல் ஸஊத் ஆகியோருக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானிக்கும் சவூதி அரேபிய மக்கள் உட்பட இத்திருக்கலிமாவை ஏற்றிருக்கின்ற அனைத்துலக முஸ்லிம்களுக்கும் எம்முடைய மனம் நிறைந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் இக்கொடி தினத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் இக்கலிமாவின் படி வாழ அருள் புரிவானாக.

எம்.எச்.ஷைஹுத்தீன் பீ.ஏ. மதனி
பணிப்பாளர்,
அல் ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...