சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில் இன்று திங்கட்கிழமை (24) அதிகாலை கொழும்பில் காலமானார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக அங்கத்தவராகவும் அதனுடைய முன்னான் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றிய இவர் ஊடகத்துறைக்கு பெரும் பங்களிப்பு செய்திருந்தார்.
அத்துடன் தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் (SAFMA) இலங்கைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இவர் கடமையாற்றி வந்தார்.
சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் அதன் தொழிற்சங்கத்தினதும் நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் பொருளாளராகவும் அவர் கடமையாற்றினார்.
ஒரு பத்திரிகையாளராக, மொழிப்பெயர்ப்பாளராக, ஊடக பயிற்றுவிப்பாளராக அவர் ஊடக உலகுக்கு பெரும் பங்களிப்பு வழங்கினார்.
சிங்களம், தமிழ், ஆங்கலம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராக தாஹா முஸம்மில் விளங்கினார்.
சுதந்திர ஊடக அமைப்பு விடுத்துள்ள இரங்கல் செய்தியில்..,
தாஹா முஸம்மில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்காக உறுதியாக போராடியவர். வெளிப்படைத்தன்மையும் உள்ளடக்கத்தன்மையும் சமூக அமைப்புகளின் நிலைத்தன்மைக்கான முக்கியக் காரணிகள் என அவர் நம்பினார். நீதிக்காகவும் நேர்மைக்காகவும் அவர் எடுத்த அடையாளம், பலருக்கும் ஊக்கமளித்தது.
சிங்களம், தமிழும், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சியுள்ளவராக, அவர் சமூகங்களுக்கு இடையே பாலமாக இருந்து பன்முகத்தன்மையை ஊக்குவித்தார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அவர் விடாப்பிடியாக உழைத்தார்.
பன்முகத்தன்மை என்பது ஒரு பலம் என்பதற்கான உண்மையான எடுத்துக்காட்டு அவர். இன்றைய சூழலில் அவரது பேச்சும் செயலும் மிகவும் தேவையானவை. அவர் இனி நம்மோடு இல்லாவிட்டாலும், அவர் நிலைநாட்டிய அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அவர் தொடந்த எண்ணற்ற உயிர்கள் மூலம் அவரது நினைவு நிலைத்திருக்கிறது எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரது ஜனாஸா இராஜகிரிய, ஒபேசேகரபுர, நாணயக்கார மாவத்தையிலுள்ள 163/1 என்ற இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.