ஐக்கிய அமீரகத்தில் வேலை செய்து வந்த இந்தியப் பெண் ஒருவர் கொலை குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
4 வயது குழந்தையைக் கொன்றதாக அந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தன்னை மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதாக அந்த பெண் வாதங்களை முன்வைத்த போதிலும், அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இலங்கை மட்டுமில்லாது இந்தியாவைச் சேர்ந்த பலரும் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கம்.
அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகப்படியான இந்தியர்கள் வேலைக்காகச் செல்கிறார்கள்.
அப்படி ஐக்கிய அமீரகத்தில் வேலைக்காகச் சென்ற பெண் ஒருவருக்கு அங்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு இருந்தது.
ஐக்கிய அமீரகத்தில் மரண தண்டனையை எதிர்கொண்டிருந்த ஷாஜாதி கான் என்ற அந்த இந்தியப் பெண் தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான ஷாஜாதி கான், 4 மாத குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் அபுதாபியில் மரணதண்டனையை எதிர்கொண்டிருந்தார்.
அவர் கடந்த பெப்ரவரி 15ம் திகதி ஐக்கிய அமீரக சட்ட விதிகளின்படி தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஷாஜாதி கானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து கடந்த பெப்ரவரி 28ம் திகதி ஐக்கிய அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்ததாகவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா டெல்லி ஐகோர்ட்டில் தெரிவித்தார்.
மார்ச் 5ம் தேதி ஷாஜாதி கான் உடல் தகனம் செய்யப்படும் என்றும் குடும்பத்தினருக்கு அரசு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் சேதன் சர்மா குறிப்பிட்டார்.
ஷாஜாதி கான் கைதை தொடர்ந்து அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து தெளிவான தகவல் தெரியாத நிலையில், அவரது தந்தை ஷபீர் கான் இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் விசாரணையிலேயே மத்திய அரசு இந்த தகவல்களைத் தெரிவித்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு நடந்தது துரதிர்ஷ்டவசமானது எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.