இஸ்ரேலின் மின்சக்தி அமைச்சர் எலி கோஹன், காசாவிற்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
புனித ரமழான் மாதத்தில் தொடர்ந்து வரும் உதவி பற்றாக்குறைக்கு மத்தியில், உவர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் காசாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மின்னுற்பத்தி இயந்திரங்கள், சூரியசக்தித் தகடுகள் மூலம் காசா மக்கள் ஓரளவு சமாளிக்கின்றனர்.
சென்ற வாரம் காசாவுக்கான நிவாரணப் பொருட்களைத் தடுத்துவைத்த இஸ்ரேல் இப்போது மின்சாரத்தையும் துண்டித்திருக்கிறது. போரினால் காசா பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது, மேலும் மின்சார விநியோகத்தின் ஒரு பகுதியாக ஜெனரேட்டர்கள் மற்றும் சோலார் பேனல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கட்டாரின், டோஹாவில் போர்நிறுத்தம் மற்றும் கைதி பரிமாற்ற பேச்சுவார்த்தைகள் தொடரவுள்ள நிலையில், மின்சாரம் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் வருகையை இஸ்ரேல் துண்டித்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஹமாஸ் அமைப்பு இது “கேவலமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்” என குற்றம் சாட்டியுள்ளது.
இதேவேளை, காசா நகரின் ஷுஜாயே பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, பலர் காயமடைந்ததாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.