ஹமாஸ் அமைப்புடனான் முதல் கட்ட போர் நிறுத்தம் நேற்றுடன் (02) காலாவதியானதை அடுத்து காசாவுக்கான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் முடக்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதுவரான ஸ்டீவ் விட்கொப் முன்வைத்த தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை நீடிப்பது தொடர்பிலான பரிந்துரையை ஹமாஸ் ஏற்க மறுத்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதனை ஒரு ‘மலிவான மிரட்டல்’ என்று சாடி இருக்கும் ஹமாஸ் அமைப்பு, போர் நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான சதிவேலை என்றும் உதவி விநியோகத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என்று மத்தியஸ்தர்களையும் கேட்டுள்ளது.
எட்டப்பட்ட காசா போர் நிறுத்தத்தின்படி இரண்டாம் கட்ட உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு ஹமாஸ் அமைப்பு வலியுறுத்துகிறது.
பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக எஞ்சிய இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு காசாவில் இருந்து இஸ்ரேலியப் படை வாபஸ் பெறுவது மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு வழிவகுப்பதாகவே இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் அமையும்.
எனினும் முதல் கட்ட போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு இஸ்ரேல் விருப்பத்தை வெளியிட்டு வருகிறது. இரண்டாம் கட்டப் போர் நிறுத்தம் இறுதியாக நடைபெறுவதை மத்தியஸ்தர்களான அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து உறுதி அளிக்கும் வரை முதல் கட்ட போர் நிறுத்தத்தை நீடிப்பதை ஏற்க முடியாது என்று ஹமாஸ் அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் நெதன்யாகு அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் முதல் கட்டம் முடிவுற்றதுடன் தொடர்ந்து பேசுவதற்கான விட்கொப்பின் திட்டத்திற்கு இஸ்ரேல் இணங்கிய நிலையில் ஹமாஸ் மறுத்த சூழலில் (02) தொடக்கம் காசாவுக்குள் அனைத்து பொருட்கள் மற்றும் விநியோகங்கள் செல்வதும் நிறுத்தப்படுகிறது.
எமது பணக்கைதிகள் விடுவிக்கப்படாது போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் அனுமதிக்காது. ஹமாஸ் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்தால் மேலும் விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும்.’
ஹமாஸ் பேச்சாளர் கூறியதாவது, ‘காசாவுக்கு உதவிகள் செல்வதை நிறுத்தும் நெதன்யாகுவின் முடிவு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கொடிய முகத்தை மீண்டும் ஒருமுறை காண்பிப்பதாக உள்ளது…. எமது மக்களை பட்டினியில் வைப்பதை நிறுத்துவதற்கு இஸ்ரேலிய அரசு மீது சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளதை ஐ.நாவும் அரபு நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன.
மனிதாபிமான பொருட்கள் காசாவிற்குள் செல்வதற்கு இஸ்ரேல் தடைவிதித்துள்ளதை கடுமையாக கண்டித்துள்ள கத்தார் இது தெளிவான யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் என தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பட்டினியை பலஸ்தீன மக்களிற்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்துகின்றது என எகிப்து குற்றம்சாட்டியுள்ளது.
காசாவில் யுத்த நிறுத்தம் சாத்தியமாவதற்கான மத்தியஸ்த முயற்சிகளை எகிப்தும் கத்தாரும் மேற்கொண்டிருந்தன.
இஸ்ரேலின் நடவடிக்கையை சவூதி அரேபியாவும் கடுமையாக கண்டித்துள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டம் தெளிவானது முக்கியமான உயிர்காக்கும் பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்கவேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான பிரதி செயலாளர் நாயகம் டொம் பிளெச்சர் தெரிவித்துள்ளார்.