காற்றில் பறந்த நீதிபதி உத்தரவு: 200க்கும் மேற்பட்டோரை எல் சால்வடார் நாட்டுக்கு நாடு கடத்திய ட்ரம்ப் அரசு

Date:

சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், குற்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை நாடுகடத்தும் பணிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது.

இதற்கிடையே நாடு கடத்தல் உத்தரவுக்குத் தடை விதிக்க கோரி அமெரிக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்ட நிலையில், அந்த தடையை மீறி டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து நாடு கடத்தல் நடவடிக்கையை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நாடு கடத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் அனைவரும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.  அமெரிக்கர்களின் வேலைகளைப் பறிக்கிறார்கள் என்பதே அவரது வாதமாகும். இதனால் அதுபோல அமெரிக்காவில் நுழைந்த வெளிநாட்டினரைக் குறிவைத்து நாடு கடத்தி வருகிறார்கள்.

அதன்படி ட்ரம்ப் நிர்வாகம் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சட்டத்தைப் பயன்படுத்தி பலரையும் நாடுகடத்தி வருகிறது.

போர் காலத்தில் பயன்படுத்தக்கூடிய சட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இப்போது போர் இல்லாத சூழலில், போர் கால சட்டத்தை ட்ரம்ப் பயன்படுத்துவது தவறு எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், ட்ரம்ப்  இதை எல்லாம் கேட்பதாக இல்லை. இந்தச் சட்டத்தின்படியே வெனிசுலா கேங் உறுப்பினர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அரசு ஈடுபட்டு இருந்தது.

இந்த நாடுகடத்தல் உத்தரவுக்கு அமெரிக்க பெடரல் நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டார். இருப்பினும், நீதிபதி உத்தரவிட்ட போது ஏற்கனவே அவர்களது விமானம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜேம்ஸ் இ. போஸ்பெர்க் நாடு கடத்தலைத் தற்காலிகமாக நிறுத்தும்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். ஆனால், அமெரிக்க அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுடன் ஏற்கனவே இரு விமானங்கள் கிளம்பிவிட்டதாகத் தெரிவித்தனர். ஒரு விமானம் எல் சால்வடாருக்கும் மற்றொன்று ஹோண்டுராஸுக்கும் சென்றாக குறிப்பிட்டனர்.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி போஸ்பெர்க் இரு விமானங்களையும் மீண்டும் அமெரிக்காவுக்குத் திருப்ப வாய்மொழியாக உத்தரவிட்டார்.

இருப்பினும், இறுதியாக வெளியிடப்பட்ட தனது எழுத்துப்பூர்வ உத்தரவில் அதை அவர் சேர்க்கவில்லை. இதனால் ட்ரம்ப் நிர்வாகம் விமானங்களைத் திருப்பவில்லை. நீதிபதியின் உத்தரவை மதிக்காமல் ட்ரம்ப்  நிர்வாகம் நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகப் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர்.

இதற்கிடையே வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் இது குறித்து விளக்கமளித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுகளை மீறி டிரம்ப் நிர்வாகம் செயல்படுகிறதா என்ற கேள்விக்கு கரோலின் லீவிட்ஷ “டிரம்ப் நிர்வாகம் ஒருபோதும் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க மறுத்து இல்லை. முதலில் அந்த உத்தரவு எழுத்துப்பூர்வமானது இல்லை. மேலும், அந்த உத்தரவு வந்தபோது அவர்கள் ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்” என்றார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...