சிரியாவில் ஆசாத் வீழ்ச்சிக்குப் பிறகு பெரிய மோதல்; 1000இற்கும் மேற்பட்டோர் பலி; தேசிய ஒற்றுமையை பாதுகாக்க அதிபர் அழைப்பு

Date:

சிரியாவின் கடலோரப் பிராந்தியமான லடாக்கியாவில் அந்நாட்டின் புதிய நிர்வாகத்தில் இணைந்துள்ள துணை இராணுவக் குழுக்களுக்கும் வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கடும் மோதலில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1018 ஆக உயர்ந்துள்ளது என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

இவர்களி்ல் 745 பேர் பொதுமக்கள் எனவும் அக்கண்காணிப்பகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வார நடுப்பகுதியில் தற்போதைய அரசுப் படைகளுக்கு எதிராக வெளியேற்றப்பட்ட பஷார் அல்-ஆசாத் அரசாங்கத்தின் சில ஆதரவாளர்கள் மறைந்திருந்து நடத்திய தொடர் தாக்குதல்களில் 16 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, இந்த மோதல்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில், நேற்று டமஸ்கஸ் அல் மஸா பள்ளிவாசலில் அதிகாலை தொழுகையை நிறைவேற்றிய புதிய ஜனாதிபதி அல் சாரா அங்கு உரையாற்றுகையில்,

“நாம் ஒரு சிக்கலான சூழலில் நின்று கொண்டிருக்கிறோம். புதிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளோம். முன்னாள் ஆட்சியாளர்கள், அவர்களுக்கு ஆதரவு தரும் அந்நியர்கள் புதிய கலவரத்தை மூட்டிவிட்டுள்ளனர். நமது ஒற்றுமையை, ஸ்திரத்தன்மையைக் குலைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர்.

இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் ஈவு இரக்கமின்றி தண்டிக்கப்படுவார்கள். சாமானியர்களின் ரத்தம் சிந்தக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் மோசமான விளைவுகளை சந்திப்பார்கள். இங்கே எல்லோரும் சட்டத்துக்கு முன் சமம். கலவரப் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். சிரிய மக்களின் ரத்தம் படிந்த கைகள் கொண்டவர்கள் வெகு விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.

லடாக்கியாவின் பொது பாதுகாப்பு பணியகத்தின் தலைவரான முஸ்தபா கினிவதி, தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிவில் அமைதியைப் பேணுவதற்கும் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்கும் நாங்கள் முழுமையாக உறுதி பூண்டுள்ளோம். இக்கொள்கையை மீறுவதற்கு எந்த சகிப்புத்தன்மையும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவின் வடமேற்கில் உள்ள கடலோர பகுதிகளான டார்டஸ், லடாக்கியா ஆகிய மாகாணங்களில் சிரியா பாதுகாப்பு படையினருக்கும் அசாத் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் மூண்டுள்ளது. அங்கு நிலவும் அசாதாரணச் சூழலை கட்டுப்படுத்த கூடுதல் படைகளை அப்பகுதிக்கு இடைக்கால அரசு அனுப்பி வைத்துள்ளது.

குறிப்பாக, லடாக்கியா நகர தெருக்களில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து வந்து சித்ரவதை செய்ததாகவும் தகவல் வெளியானது. பனியாஸ் பகுதிகளில் இந்தக் கொடுமை நடந்துள்ளது.

நகர வீதிகளில் நிர்வாணமாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண்களின் சடலங்கள் ஆங்காங்கே கிடப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

அந்த சடலங்களை உறவினர்கள் எடுப்பதற்காக வருவதைத் தடுக்கும் வகையில் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியுடன் அங்கு காவலுக்கு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...