சிரியாவில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், முன்னாள் அதிபர் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் மோதல் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
அங்குள்ள கடற்கரையை ஒட்டியுள்ள 3 கிராமங்களுக்குள் நேற்று அரசு படைகள் திடீரென நுழைந்தன. பின்னர் கண்ணில் பட்ட ஆசாத்தின் ஆதரவாளர்களை கண்மூடித்தனமாக சுட்டனர்.
இந்த சம்பவத்தில் சுமார் 70 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இஸ்லாமியக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் ஆசாத்தின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் மிக மோசமான வன்முறையை ஏற்படுத்தி வருகின்றன.
14 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பிறகு சிரியாவை ஒன்றிணைக்க புதிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்நிலையில் இந்த மோதல் தொடங்கியதிலிருந்து தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதன்படி கிராமங்களில் நடந்த பழிவாங்கும் தாக்குதல்களில் சுமார் 140 பேர் கொல்லப்பட்டதைத் தவிர, இறந்தவர்களில் குறைந்தது 50 சிரிய அரசுப் படைகளும், 45 முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவினரும் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது.
அரசுப் படைகளுக்கும், முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவுக்கும் இடையே நடந்த மோதலால் அங்கு நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட இந்த கடும் மோதல்களுக்கு என்ன காரணம் என ஆராய்ந்து பார்க்கையில்
லத்தாகியா, டார்டூஸ், மற்றும் ஹாமா மாகாணங்களில், அரசுப் படைகள் முன்னாள் அரசாங்க ஆதரவாளர்களின் படைகளை ஒழிக்க தொடங்கியதிலிருந்து மோதல் அதிகரித்துள்ளது.
எதிர்க்கட்சியினர் திடீரென இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் தலைமையகங்களை தாக்கினர்இதன் பின்னர், அரசுப் படைகள் கடுமையான பதிலடி வழங்கி வருகின்றன.
இந்நிலையில் கண்காணிப்பு அமைப்பின் தகவலின் அடிப்படையில் முக்கிய பகுதிகளில் கூடுதல் ராணுவ பலம் மற்றும் கனரக ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
குறிப்பாக, லத்தாகியா மற்றும் டார்டூஸ் பகுதியின் புறநகரங்களில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த டிசம்பருக்குப் பிறகு இடம்பெறும் கடுமையான மோதலாக இது உள்ளதாகவே கண்காணிப்பு அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது,
கடந்த டிசம்பரில் முன்னாள் அரசு வீழ்ச்சியடைந்ததிலிருந்து இது வரை இடம்பெற்ற மோதல்களில் அதிகம் பேரை பலியெடுத்த மோதலாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் மோதல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு,
ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் எஸ்மாயீல் பகாயி, நாடு தற்போதைய நிலைமைக்கு தீவிர கவனிப்பு செலுத்தி வருவதாகவும், தொடரும் அமைதியின்மைக்கு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் நிலவும் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் வன்முறைகள், முழு பகுதிச் சூழலையும் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.
ஈரானின் அரசியல் நிலைப்பாடு, சிரியாவின் நிலைப்புத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், வெளி சக்திகளின் (முக்கியமாக இஸ்ரேல்) பாதிப்புகளை தடுக்கவும் கவனம் செலுத்துகிறது.
இந்த மோதல்களுக்கு பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச சக்திகள் ஈடுபட்டுள்ளதால், அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் சிக்கலாகி வருகின்றன எனவும் ஈரான் தரப்பு கூறுகின்றது.