இலங்கைக்கு விஜயம் செய்த தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தர்ம சக்தி அமைப்பின் தலைவர், அமரபுர நிக்காயவின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய மாதம்பகம அஸ்ஸஜி திஸ்ஸ மகாநாயக்க தேரர் அவர்களை நேற்று (11) மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு கொழும்பு ஸ்ரீ இசிபதனாராம மகா விகாரையில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் தர்மசக்தி அமைப்பின் பொருளாளர் பிர்தெளஸ் மௌலவி மன்பஈ, நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்ஷெக். முஜீப் சாலிஹ் அவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னெடுத்து வரும் சமய நல்லிணக்க பணிகளுக்கும் இதர சேவைகளுக்கும் அஸ்ஸஜி திஸ்ஸ மகாநாயக்க தேரர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மகாநாயக்க தேரர் அவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கொண்டு வருகின்ற பல்வேறு சமய நல்லிணக்கம் தொடர்பான விஜயங்கள், கருத்தரங்குகள் பற்றியும் அவற்றில் விவாதிக்கப்படுகின்ற விடயங்கள் பற்றியும் இதன்போது தமிமுன் அன்சாரி அவர்கள் தெரிந்துகொண்டதோடு மகாநாயக்க தேரர் அவர்கள் சிறுபான்மை மத்தியில் தன்னுடைய சிறந்த பண்புகள் மூலமும் பரந்த செயற்பாடுகள் மூலமும் நன்மதிப்புள்ள ஒரு தலைவராக இருப்பதையும் தெரிந்துகொண்டார்.
இதேவேளை தென்னிந்தியாவில் காணப்படுகின்ற சமூக நல்லிணக்கத்திற்கான சூழல் பற்றி தமிமுன் அன்சாரி அவர்கள் மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார்.
மொத்தத்தில் இச்சந்திப்பு இலங்கை- இந்திய நல்லிணக்க பணிகளில் மேலும் உற்சாகமாக ஈடுபடுவதற்கான சந்தர்ப்பமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இறுதியில் மகாநாயக்க தேரர் அஸ்ஸஜி திஸ்ஸ தேரர் அவர்கள் புத்தகயாவின் பௌத்த அடையாளம் தாங்கிய நினைவுச்சின்னமொன்றை தமிமுன் அன்சாரி அவர்களுக்கு பரிசளித்தார்.