காசாவில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் உட்பட குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதனை ஹமாஸ் அமைப்பு மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
ஹமாஸ் அரசியல் அமைப்பை சேர்ந்த இஸ்மாயில் பர்ஹோம் நாசர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்கிரமிப்பின் நீண்டகால பயங்கரவாதத்தை தொடரும் வகையில் உயிர்கள் மற்றும் மருத்துவ வசதிகளை அழிக்கும் இந்த குற்ற செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளை புறக்கணித்து, மக்கள் மற்றும் தலைமைக்கு எதிராக திட்டமிட்ட படுகொலை செய்யும் தொடர்ச்சியான கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது,” என தெரிவித்துள்ளது.
இதேவேளை தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் நேற்று (23) அதிகாலை நடத்திய தாக்குதலிலேயே ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஒருவரான சலாஹ் அல் பர்தாவில் கொல்லப்பட்டுள்ளார். அதிகாலை தொழுகையில் ஈடுபட்டிருந்தபோதும் அவர் தங்கி இருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது அவரது மனைவியும் கொல்லப்பட்டுள்ளார்.
‘அவரது இரத்தம், அவரது மனைவி மற்றும் தியாகிகளின் இரத்தம், விடுதலை மற்றும் சுதந்திரப் போருக்கு உந்துசக்தியாக இருக்கும். குற்றவாளியான எதிரியால் எமது உறுதியையும் நோக்கத்தையும் முறியடிக்க முடியாது’ என்று ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் இரண்டு மாதங்கள் நீடித்த போர் நிறுத்தத்திற்கு பின்னர் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் பல சிரேஷ்ட தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு மற்றும் சட்டமன்ற சபை உறுப்பினராகவும் இருக்கும் சலாஹ் பர்தாவில் காசாவில் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருபவராவார். அவரது மரணம் எதிர்கால போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த டிசம்பர் 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல்களில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.