பாசிஷம், இந்து, பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற எந்த வடிவிலும் இருக்கலாம். அதனை பக்கச்சார்பின்றி எதிர்த்து நிற்பது மானிடக் கடமை என்பதை தமிமுன் அன்சாரி அவர்கள் உதாரணங்களுடன் விளக்கினார் என மூத்த சட்டத்தரணி பாரிஸ் தெரிவித்தார்.
தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாகப்பட்டினம் முன்னாள் எம். எல். ஏ சகோதரர் தமிமுன் அன்சாரி, அவர்கள் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு 10ஆம் திகதி விஜயம் செய்திருந்தார்.
இந்த சந்திப்பில் இந்தியா இலங்கைக்கு இடையேயான சமூக சமய அரசியல் வியாபாரம் பற்றியும் விஷேடமாக சேர சோழ பாண்டிய காலம் ஆரம்பித்து தென்னந்திய இலங்கை தொடர்பு பற்றியும் தமிழ் எவ்வாறு இனத்தால், மொழியால், உணர்வால், கொள்கையால், பண்பாட்டால், கலாசாரத்தால் எம்மை தமிழ் நாட்டு சமுதாயத்தோடு பிணைக்கிறது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் எவ்வாறு தென்னிந்தியாவில் இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் ஒன்றித்து வாழ்கிறார்கள் என்பது பற்றியும் திட்டமிட்ட முறையில் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் பாசிஸ சக்திகள் தோற்றுப் போகின்றன என்பதையும் தமிமுன் அன்சாரி விளக்கினார்.
பலஸ்தீன் காசாவாக இருக்கலாம் இந்தியாவின் அஸாமாக இருக்கலாம் இலங்கையின் முள்ளிவாய்க்காலாக இருக்கலாம் இந்த எல்லா இடங்களிலும் நடக்கும் மனித அவலத்தை, இனச்சுத்திகரிப்பை ஒரே மன நிலையில் எதிர்த்து வினையாற்றும் பக்குவம் தேவை என்றும் தமிமுன் அன்சாரி அவர்கள் தமது அரசியல் செயற்பாடு குறித்தும் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை கோட்பாடு மற்றும் அதன் INDIA கூட்டணி இலங்கை பற்றியும் தெளிவாக விளக்கினார்.


