அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர்கள் விடுதியில் 32 வயதான பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் தான் சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டு வெளியில் வந்த நிலையில் கையில் பணம் இல்லாததால் மேற்படி பெண் வைத்தியர் விடுதிக்குச் சென்று பொருட்களை திருட முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் அங்கு சென்றபோது மேற்படி பெண் வைத்தியர் மட்டுமே அங்கு இருந்ததாகவும் மேலும் அந்த சம்பவம் தொடர்பிலும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அத்துடன் மேற்படி சம்பவத்தின் பிரதான சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்னேவ, நிதிகும்பாயாய பகுதியில் வைத்து மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் பெண் வைத்தியரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பின்னர் சந்தேகநபரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் கைத் தொலைபேசியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதுடைய மேற்படி சந்தேகநபரின் சகோதரி மற்றும் 27 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (13) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கல்னேவ பொலிஸார் மற்றும் அநுராதபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று மேற்கொண்ட தேடுதலின் போது, கல்நேவ பிரதேசத்தில் காட்டில் மறைந்திருந்தபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.