மியான்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056ஆக அதிகரித்திருக்கிறது என அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
இடிபாடுகளை அகற்றும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியின்போது அதிக அளவில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மியான்மாரில் பலத்த நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவில் 7.7 என பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளை போல அப்படியே சரிந்தன.
இது பற்றிய சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகியிருந்தது. ஏற்கெனவே அந்நாடு தற்போது உள்நாட்டு போரை எதிர்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நிலநடுக்கம் பாதிப்பு அந்நாட்டு மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது. தொடக்கத்தில் சில நூறு பேர்கள் மட்டும் உயிரிழந்ததாகவும், பலநூறு பேரை காணவில்லை என்று சொல்லப்பட்டது.
ஆனால் மீட்பு பணிகள் தீவிரமடைய உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இன்று மதியம் நிலவரப்படி மொத்த பலி எண்ணிக்கை 2056ஆக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
3000க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டிருக்கின்றன.
நாம் வசிக்கும் பூமியே நிலதட்டுக்களால்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தட்டுக்களுக்கு கீழே சூடான லாவா உருண்டை இருக்கிறது.
இது சுற்றிக்கொண்டிருப்பதால்தான் பூமி தன்னைதானே சுற்றி வருகிறது. லாவா உருண்டையின் சுழற்சி காரணமாக மேல் உள்ள நில தட்டுக்கள் நகர தொடங்கும். இதனால்தான் நிலநடுக்கம் ஏற்படுகிறது.
சில நேரங்களில் நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்திவிடுகின்றன. ஆனால் எல்லா நிலநடுக்கங்களும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
உதாரணமாக பூமியில் ஒரு நாளைக்கு 50,000க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் ரிக்டர் அளவில் 2.0க்கும் குறைவாக பதிவாகிறது. எனவே இதனை மனிதர்களால் உணர கூட முடியாது.
ஆனால், 6.0 – 6.9 என்கிற அளவில் 1 நிலநடுக்கமாவது பதிவாகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
2.0 – 2.9 சில முறை உணரக்கூடியது, ஆனால் பாதிப்பு இல்லை.
3.0 – 3.9 சில நேரங்களில் உணரலாம், ஆனால் மிகக் குறைந்த அளவிலான சேதம்.
4.0 – 4.9 வெளிப்படையாக உணரக்கூடிய நிலநடுக்கம். சில கட்டிடங்களின் சாளரங்கள் உடையலாம்.
5.0 – 5.9 பலமான அதிர்வு. பழைய மற்றும் பலவீனமான கட்டிடங்கள் சேதமடையலாம்.
6.0 – 6.9 தீவிரமான நிலநடுக்கம். கட்டிடங்கள், பாலங்கள் இடிந்து விழும் அபாயம். உயிரிழப்பு ஏற்படலாம்.
7.0 – 7.9 மிகப்பெரிய நிலநடுக்கம். பெரும் அளவில் கட்டிடங்கள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும். பெரும் உயிரிழப்பு.
8.0 – 8.9 மாபெரும் பேரழிவு. நகரங்கள் முழுவதும் அழிந்து போகும். சுனாமி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
9.0 + பயங்கர பேரழிவு. நாடு முழுவதும் பாதிப்பு ஏற்படும். பெரும் உயிரிழப்பு மற்றும் பொருளாதார சேதம். இதுதான் நிலநடுக்கங்களின் சேதம் விவரம்.
தினமும் ஏற்படும் நிலநடுக்கம் விவரங்களை பொறுத்தவரை,
2.0 – 2.9 1,000 – 1,500 (சில இடங்களில் மட்டுமே உணரலாம்)
3.0 – 3.9 100 – 150 (சில சமயங்களில் உணரலாம், பெரிய பாதிப்பு இல்லை)
4.0 – 4.9 10 – 20 (உணரக்கூடியது, சில கட்டிடங்கள் பாதிக்கப்படும்)
5.0 – 5.9 3 – 5 (சில கட்டிடங்கள் சேதமடையும்)
6.0 – 6.9 1 (தீவிரமான நிலநடுக்கம், பாதிப்பு ஏற்படும்)
7.0 + மாதத்திற்கு 1 – 2 (பெரும் சேதம் ஏற்படும்)
8.0 + வருடத்திற்கு 1 (பெரும் பேரழிவு ஏற்படும்) என நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன.
இதற்கு முன்னர் 2015ம் ஆண்டு நேபாளத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. ரிக்டர் அளவில் 7.8 என பதிவாகியிருந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 9000 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.