இலங்கையில் COVID-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் முதலாவது ஜனாஸா எரிக்கப்பட்ட தினம் நாளை மார்ச் 31 ஆகும்.
அந்த வேதனையான தினத்தை நினைவுகூரும் வகையில், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் மரிக்கார் எழுதிய அர்த்தமுள்ள கவிதையை வாசகர்களுக்காக வழங்குகிறோம்.
அந்த வேதனையான நாட்கள் இன்றும் மனங்களில் அழியாத வலியாக நிற்கின்றன. மண்ணுக்கு அர்ப்பணிக்க முடியாமல், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சோதனைகளை கவிஞர் தனது வரிகளில் பதிவு செய்துள்ளார்.
நினைவு கீதம்..!
5 ஆண்டு நிறைவு கீதம்..!!
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
நீதியின் நிர்வாணம்…
சடலத்தில் செய்த இனவாதம்…!
விஞ்ஞானத்தை
கொழுத்தினாய்…
பிறந்த பிஞ்சுகளை
பற்றவைதாய்…
உரிமைகளின்
குரல்வளை கடித்தாய்…!!
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
குருதி கொதித்த நாள்…!
எம் கூட்டை சிதைத்த நாள்…!
கட்டாயத் தகனத்தில்…
இலங்கை வரலாறே எரிந்த நாள்…
துஆ செய்ய… தாயின்
சாம்பலை தேடும் நாள்..
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
சூரியனே நெஞ்சில் சுட்ட
சூடு உணர்ந்தோம்…!
ஆயிரம் ஆண்டு…
அமைதிச் சமூகம்…
தீயிற்கு
தின்னக் கொடுக்கப்பட்டோம்..!
நெருப்பில் குளித்த
அடையாளம்…
நீதியின் நிர்வாணம்…
சடலத்தில் செய்த இனவாதம்…!
காலத்தால்…
நிகழ்வுகள் மறந்துபோகலாம்…
நிஜங்கள் புதைந்து போகக்கூடாது…!
இனியேனும் நிகழாதிருக்க…!
இந்த வரலாற்றை பதிவுசெய்வோம்…!!
—-
எழுத்து இயக்கம்,
புத்தளம் மரிக்கார்.
30-03-2025