புனித ரமழான் மாதத்தில் முக்கிய இரவாக கருதப்படுகின்ற ‘லைலதுல் கத்ர்’ என்ற 27ஆவது இரவு நேற்றைய தினம் புனித மக்காவிலுள்ள புனித ஹரம் ஷரீபில் மில்லியன் கணக்கான மக்களுடைய பிரசன்னத்துடன் இடம்பெற்றது.
வரலாற்றில் எப்போதுமில்லாத அளவுக்கு மக்கள் ஒன்றுகூடிய இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் 3 கிலோ மீற்றர் தூரத்தையும் தாண்டிச் செல்லும் அளவுக்கு வரிசைகளில் நிற்கின்ற காட்சிகள் ஊடகங்களினூடாக வெளியாகியுள்ளன.
‘லைலத்துல் கத்ர்’ என்பது அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவை குறிக்கிறது. இந்த இரவில் மக்கள் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்தும் தொழுகைகளில் ஈடுபட்டும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். இந்த இரவில் செய்கின்ற வணக்கம் ஆயிரம் மாதங்களுக்கு சமனானது என புனித குர்ஆன் கூறுகின்றது.
இறை ஆற்றலால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கும் இந்த இரவின் நீளம் மற்ற இரவுகளின் நீளத்தை விட நீண்டதில்லை. அதனால்தான் என்னவோ இந்த இரவின் ஒரு நொடியைக் கூட முஸ்லிம்கள் வீணடிக்க விரும்புவது இல்லை.
இந்த இரவில் அவர்கள் தூக்கத்தைத் தவிர்த்து, திரு குர்ஆனை ஓதி, தொழுகையில் ஈடுபட்டு, இறை வழிபாட்டில் மூழ்கி, ஆன்மிகத்தில் திளைத்து, லயித்து இருப்பர். இந்த இரவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய வழிபாடு பாவங்களிலிருந்து விடுதலை அளிக்கும் என்பது நம்பிக்கை.