காசாவில், இஸ்ரேல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடங்கியுள்ள இனப்படுகொலைகளை கண்டித்து நேற்று (21) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு பலஸ்தீன விடுதலைக்கான இலங்கை இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இனப் படுகொலையை நிறுத்து!’, ‘இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு!’, ‘அமெரிக்கா, நீங்களும் இஸ்ரேலும் இன்று எத்தனை குழந்தைகளைக் கொன்றீர்கள்?’ என்று கோஷமிட்டனர். அதேபோன்று. இஸ்ரேலுக்கு எதிராக வசனங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
பலஸ்தீன சுதந்திரம் என்பது அனைத்து சுதந்திரங்களுடனும் பிணைக்கப்பட்டுள்ளது. பலஸ்தீன மக்களின் போராட்டம் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டமாகும். நாம் அனைவரும் சுதந்திர பலஸ்தீனத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
அதனால்தான் கிழக்கில் நடைபெற்று வரும் சியோனிச சுற்றுலா குடியிருப்புகளை நமது அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அதனால்தான் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்ப வேண்டாம் என்று எங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.