ஸகாத் மற்றும் வருமான வரி: ஓர் ஒப்பீட்டு ஆய்வு..! என்.எம்.எம். மிப்லி (நளீமீ)

Date:

N.M.M மிப்லி (நளீமீ)

வருடாந்தம் ஒவ்வொரு முஸ்லிமிடமும் குறிப்பிட்ட ஒரு தொகைக்கு மேல் தேறிய செல்வம் இருப்பின் அவர் மீது இஸ்லாம் விதிக்கும் நேர் வரியே ஸகாத் ஆகும்.

அவ்வாறே வருடாந்தம் ஒவ்வொரு நபரும் குறிப்பிட்ட ஒரு தொகைக்கு மேல் தேறிய வருமானம் உழைத்து இருப்பின் அவர் மீது அரசு விதிக்கும் நேர் வரியே வருமான வரியாகும்.

இந்த வரைவிலக்கணத்தின் படி ஸகாத்துக்கும் வருமான வரிக்கும் இடையில் ஒற்றுமையையும் வேறுபாடும் இருக்கின்றன என்பது தெளிவாகின்றது.

இந்த ஆய்வின் பிரதான நோக்கம் ஸகாத் மற்றும் வரி பற்றிய ஓர் ஒப்பீட்டு தெளிவை வாசகர்களுக்கு வழங்குவதாகும்.

ஏனெனில் முஸ்லிம்கள் பொதுவாக ஹிஜ்ரி ஃசந்திர வருடமான 09ம் மாதமாகிய ரமலானில் தான் தங்களது ஸகாத் எனும் செல்வ வரியை செலுத்துகின்றனர். ஹிஜ்ரி வருடம் என்பது சூரிய வருடத்தை விட 11 நாட்கள் குறைவானதாகும்.

ஸகாத் இலங்கையில் காணப்படும் வருமான வரி பற்றிய சட்டங்கள் நடைமுறைகளையும் ஸகாத் பற்றி அறிஞர்களின் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படும்போது அவற்றுள் அதிக பலம் கூடிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டே இந்த ஆய்வு தயாரிக்கப்பட்டுள்ளது.

மத மற்றும் சட்ட ரீதியான கடமை;

ஸகாத் என்பது புனித அல் குரான் ஒவ்வொரு முஸ்லீம் மீதும் – அவரின் வதிவிடமை எங்கு இருப்பினும்- விதித்த மத கடமையாகும். வருமான வரி என்பது ஓர் அரசு தனது அதிகார வரம்புக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் வதிவிட, வதிவில்லா நபர்கள் மீது விதிக்கும் சட்ட ரீதியான கடமையாகும்.

அதன்படி, ஸகாத் என்பது சுய விருப்பத்துடனும், சுய மதிப்பீட்டின் அடிப்படையில் முஸ்லிம்கள் தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ செலுத்தும் ஒரு வரியாகும்.
ஆனால் வருமான வரி எனப்படுவது சுய மதிப்பீட்டுடன் சட்ட ரீதியான மதிப்பீட்டு முறையையும் கொண்டுள்ளது.

பொதுவாக, வரி செலுத்துவோர் சுய மதிப்பீட்டின் அடிப்படையிலேயே தங்கள் வரிகளைச் செலுத்துவார்கள். ஒருவர் சுய மதிப்பீட்டின் அடிப்படையில் வரி செலுத்தத் தவறும் போது, அத்தகையவர்கள் செலுத்த வேண்டிய வரித்தொகையை அதிகாரப்பூர்வமாக அரசு மதிப்பீடு செய்யும்.

ஒரு முஸ்லிம் (ஆணோ பெண்ணோ) தனது மனசாட்சியின் அடிப்படையிலேயே ஸகாத் செலுத்துவார். ஏனெனில் அவர் சர்வ வல்லமையுள்ள தனது இறைவனுக்கு மட்டுமே பதில் கூற வேண்டும் என நம்புபவர்.

எனவே, ஸகாத் செலுத்துவதைத் தவிர்ப்பதற்கான இடம்பாடு மிகக் குறைவே. மனசாட்சி / இறைவிசுவாசத்தில் மிக பலவீனமாவரே அவ்வாறு செய்வார். ஆனால் வருமான வரி என்பது அரசுடைய ஒரு நியதியாக இருப்பதாலும் அது பெரும்பாலும் சட்டத்திற்கு அஞ்சியே செலுத்தப்படுகிறது என்பதாலும ஒரு மனிதன் இயல்பாகவே உரிய வரியைத் தவிர்ப்பதற்குரிய வழிகளையும் ஓட்டைகளையும் தேடுகிறான்.

ஸகாத்திற்கான நிபந்தனைகள்.

ஒருவருக்கு ஸகாத் கடமை ஆவதற்கு கீழ் காணும் ஐந்து அடிப்படைகள் பூரணமடைந்திருத்தல இருத்தல் வேண்டும். (இவை வருமான வரி விடயத்தில் பார்க்கப்படுவதில்லை)

1. சொத்தின்  பரிபூரண உரிமை இருத்தல்
2. அச்சொத்து ஸகாத் செலுத்துவதட்கான குறைந்த பட்ச அளவை அடைந்திருத்தல்
3. அச்சொத்து வருமானம் ஈட்டும் ஒரு முதலீடாக இருத்தல்
4. அச்சொத்து அவருடைய அத்தியாவசியத் தேவைகள் மற்றும் குறுங்கால பொறுப்புக்கள் போக மீதமுள்ளதாக இருத்தல்
5. அச்சொத்து அவருடைய உரிமையில் ஒரு வருடத்தை விட அதிக காலம் இருத்தல்
ஒவ்வொரு முன்நிபந்தனையும் விரிவான விளக்கத்தை வேண்டிநின்றாலும் விரிவஞ்சி சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.

சொத்தின்  பூரண உரிமை இருத்தல் – ஒரு நபர் சட்டப்பூர்வமாகவும் நெறிமுறை ரீதியாகவும் சொத்துக்களைப் பெற்றிருந்தால் மட்டுமே அந்தச் செல்வத்தின் ஏக போக. அதாவது முழு உரிமையைப் அவர் பெறுவார்.

திருட்டு, மோசடி, லஞ்சம் அல்லது வட்டி போன்ற இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு விரோதமான (அதாவது ஹலால் அல்லாத) வழிமுறைகள் மூலம் செல்வம் பெறப்பட்டிருந்தால், அது ஏகபோக உரிமையுள்ள சொத்தக ஆகாது. எனவே அத்தகைய ஹராமான செல்வம் ஸகாத்திற்கு உட்படாது.

மேலும் ஸகாத் செலுத்துவதன் மூலம் அதை சுத்திகரிக்கவோ ஹலாலாக்கவோ முடியாது. மாறாக வருமான வரியை எடுத்துக் கொண்டால், செல்வம் ஈட்டப்பட்ட விதம் பற்றி அதில் அக்கறை கொள்ளப்படுவதில்லை.

ஒருவர் கள்ளக்கடத்தல், இலஞ்சம் போன்ற தவறான வழிகள் மூலம் பொருள் ஈட்டப்பட்டிருந்தாலும் அதற்காக வரி செலுத்தப்பட வேண்டும் என்றே அரசின் வருமான வரித் திணைக்களம் கூறும்.

அச்சொத்து ஸகாத் செலுத்துவதட்கான குறைந்த பட்ச அளவை அடைந்திருத்ததல் – பொதுவாக, ஸகாத் செலுத்துவதற்காக குறைந்தபட்ச செல்வததின் மதிப்பு (நிசாப்) 84 கிராம் தூய தங்கத்திற்கு சமமான மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, இது நம் நாட்டை பொருத்தமட்டில் தற்காலத்தில் சுமார் இலங்கை ரூபாய் 23 இலட்சமாகும்.

இவ்வரம்பை அடையும் ஒருவர் தனது செல்வத்தின் முழு மதிப்பிற்கு, வரம்பு உட்பட, ஸகாத் செலுத்துவது கட்டாயக் கடமையாகும். ஆனால் வருமான வரியை எடுத்துக்னொண்டால், அது வருமானத்தின் மீது கணக்கிடப்படுமே அன்றி ஸகாத் போல முழு சொத்து மீதும் கணக்கிடப்பட மாட்டாது.

தற்சமயம் இலங்கையில் வருமான வரி செலுத்துவதம்கான குறைந்த பட்ச அளவு ரூபாய் 12 இலட்சமாகும்.

அச்சொத்து வருமானம் ஈட்டும் ஒரு முதலீட்டுச் சொத்தாக இருத்தல் – இதன் கருத்து, அச்செல்வம் வளர்ச்சி அடைவதாக, வருமானத்தை ஈட்டுவதாக இருத்தல் வேண்டும என்பதாகும். அதன்படி, ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள மற்றும் சேமிப்பில் உள்ள பணத்திட்கும் ஸகாத் செலுத்த வேண்டும்.

ஏதாவது ஒரு  வீட்டு,  நுகர்வு- சொத்து விற்பனை அல்லது முதலீட்டு நோக்கத்துடன் கொள்வனவு செய்யப்பட்டு தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தினாலும் கூட அதற்கு அவர் ஸகாத் வழங்க வேண்டும்.

உதாரணமாக ஒருவர் ஒரு காரை விற்பனை நோக்கத்துடன் கொள்வனவு செய்து தனது சொந்த தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றார், உரிய விலை கிடைக்கும் போது விற்பனை செய்கின்றார் எனில், அந்த வாகனத்திற்கும் அவர் ஸகாத் செலுத்த கடமைப்படுகின்றார்.

இருப்பினும், வதிவிடம், நகைகள் போன்ற தனிப்பட்ட பாவனைக்கான பொருட்கள் மற்றும் சொத்துக்கள், அதே போன்று ஆலை, உபகரணங்கள் மற்றும் கட்டிடங்கள் போன்ற வருமானத்தை ஈட்டப் பயன்படுத்தப்படும் முதலீட்டுச் சொத்துக்கள் மற்றும் இலாபமீட்டும் பங்குகள் (விற்பனைக்கு அல்ல) போன்றவைக்கு ஸகாத் கடமையாகாது.

மாறாக வருமான வரியை எடுத்துக் கொண்டால், சொத்து மீதான வரி என்ற கேள்வி எழுவதில்லை, ஏனெனில் வருமான வரியானது அதன் பெயரிட்கு ஏற்ப சொத்துக்கள் மீதன்றி வருமானத்தின் மீதே விதிக்கப்படுகிறது.

அச்சொத்து அவருடைய அத்தியாவசியத் தேவைகள் மற்றும் குறுங்கால பொறுப்புக்கள் போக மீதமுள்ளதாக இருத்தல் – ஒருவரின் சொத்து மதிப்பு ஸகாத்திட்கான குறைந்தபட்ச வரம்பை விட அதிகமாக இருந்த போதிலும், உணவு, தங்குமிடம், கல்வி, சுகாதாரம் மற்றும் வாகனம் போன்ற அவரது மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் அடிப்படைத் தேவைகள் திருப்திகரமாக பூர்த்தி செய்யாவிட்டால், ஸகாத் செலுத்துவது அவருக்கு கடமையாகாது.

அதாவது அடிப்படைத் தேவைகளுக்கான செலவினங்கள் மற்றும் செலுத்தவுள்ள, குறுகிய காலக் கடன்களைக் கழித்த பிறகு எஞ்சும் தொகைக்கே அவர் ஸகாத் செலுத்த வேண்டும்.

மாறாக வருமான வரியை பொறுத்தவரை, மேலே குறிப்பிட்டது போன்ற தனிப்பட்ட மற்றும் வதிவிட செலவினங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதில்லை. தனிநபர்கள் விடயத்தில் இங்கு கவனத்தில் கொள்ளப்படும் ஒரே விடயம் ரூபாய் 12 இலட்சத்தை விட அதிக வருமானத்தை அவர் ஈட்டினாரா என்பது மட்டுமே.

அச்சொத்து அவருடைய உரிமையில் ஒரு வருடத்தை விட அதிக காலம் இருத்தல் – ஒரு சந்திர வருடம் நிறைவடைந்த பிறகு, செல்வத்தின் மதிப்பு அதன் வரம்பை (நிசாப்) அடைந்த நாளிலிருந்து ஸகாத் செலுத்தும் பொறுப்பு தொடங்குகிறது.

அதனடிப்படையில், செல்வத்தை வைத்திருக்கும் மற்றும் மேற்கூறிய ஐந்து (05) நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அனைத்து ஆண் பெண் முஸ்லிம்களும் ஒவ்வொரு ஆண்டும் சுய மதிப்பீட்டு அடிப்படையில் 2.5 சத வீகிதத்தில் ஸகாத் செலுத்துவது கட்டாயக் கடமையாகும்.

மாறாக, வருமான வரி விடயத்தில் ஒரு வருடத்தில் ஈட்டிய வருமானத்திற்கு, அது ஆண்டு முழுவதும் அவரிடம் இருந்ததா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஸகாத்துடன் ஒப்பீடுகையில்- அதிக விகிதத்தில் வரி செலுத்துவது கட்டாயமாகும்.

நீண்ட மற்றும் குறுங்கால பொறுப்புக்கள்

பண்டைய காலங்களில், குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன்களுக்கு இடையில் எந்த வேறுபாடும் இருக்கவில்லை. அத்தகைய நடைமுறைகள் தொழில்துறை புரட்சிக்குப் பிறகே தோன்றின. முன்பு ஏறத்தாழ அனைத்து கடன்களும் குறுகிய கால கடன்களாகவே கருதப்பட்டன. அதே போன்று அனைத்து நிதிப்பொறுப்புக்களும் குறுகிய கால கடன்களாக இருந்தபடியால், அனைத்து கடன்களும் நடப்பு (குறுகிய கால) சொத்துக்களாகக் கருதப்பட்டன.

அதன்படி, ‘செல்வத்தின் பரிபூரண உரிமை’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்கள், நிதிப் பொறுப்புகளைக் கழிப்பதன் மூலமும் கடன்களைச் சேர்ப்பதன் மூலமும் நிகர செல்வத்தைக் கணக்கிட வேண்டும் என வழிகாட்டினர்.

அதே போன்று, ஒரு சில சமகால இஸ்லாமிய அறிஞர்கள் நிகர செல்வத்தைக் கணக்கிடும்போது அனைத்து நிதிப் பொறுப்புக்களையும் கழிக்க வேண்டும் மற்றும் அனைத்து கடன்களையும் – வேறுபாடு இல்லாமல் – மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கருத்தையும் கொண்டுள்ளனர்.

இருப்பினும், மேலும் சில சமகால அறிஞர்கள், நிகர செல்வத்தைக் கணக்கிடும்போது ஒரு வருடத்திற்குள் செலுத்த வேண்டிய நிதிப் பொறுப்புக்கள் மற்றும் கடன்கள் மட்டுமே கழிக்கப்பட வேண்டும் அல்லது மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என வாதிடுகின்றனர்.

இதுவே மிகச்சரியான நிலைப்பாடாகும் என்பது பெரும்பான்மை கருத்தாகும். அதே சமயம், நீண்ட கால நிதிப் பொறுப்புகள் மற்றும் கடன்கள் – அதாவது சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு செலுத்த வேண்டியவை – இந்த சீர்செய்தல்களுக்கான காரணியாகக் கருதப்படக்கூடாது.

அதற்கு பதிலாக, ஒரு நீண்ட கால பொறுப்புக்கு பொறுப்பான நபர் (Debtor) அதற்கு ஸகாத் செலுத்த வேண்டும், மேலும் நீண்ட கால கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நபர் (Creditor) அதற்கேற்ப ஸகாத்தையும் கணக்கிட வேண்டும் என்பதே சரியானதாகும்.

மாறாக வருமான வரியைப் பொறுத்தவரையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இருக்கும் எந்தவொரு நீண்ட கால நிதிப்பொறுப்பும் சம்பந்தப்பட்ட நபரின் வருமானமாகக் கருதப்பட்டு ‘தவறாகக் கருதப்படுகின்றமை’ (Deemed Inaccuracy) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வரி விதிக்கப்பட வேண்டிய சொத்தாகக் கருதப்படுகின்றது.

ஸகாத்தின் விகிதம் குறைவானதுடன் வருமான வரி விகிதம் அதிகமாகும்
பொதுவாக, ஸகாத் மற்றும் வரி ஒரு வருடத்திட்கு ஒரு தடவையே செலுத்தப்படுன்கிறது.

இருந்த போதிலும், ஒருவரின் செல்வத்திற்கு முந்தைய ஆண்டு ஸகாத் செலுத்தப்பட்டிருந்தாலும், அதன் பிறகு வரும் ஒவ்வொரு ஆண்டும் திரும்பத் திரும்ப அதற்காக ஸகாத் செலுத்தப்பட வேண்டும். ஆனால் வருமான வரியைப் பொறுத்தவரை, அது ஒரு வருமானத்தின் மீது ஒரு தடவை மட்டுமே வரி செலுத்த வேண்டும்.

ஒரே செல்வத்திற்கு ஆண்டுதோறும் ஸகாத் செலுத்தப்படுவதால், அதை 2.5 சதவீதம் என்ற சகாயமான வீதத்தை இஸ்லாம் நிர்ணயத்துள்ளது. அனைத்து தனிப்பட்ட குடும்ப மற்றும் அத்தியாவசிய செலவுகளையும் கழித்த பிறகே ஸகாத்திட்கான உச்ச வரம்பும் நிர்ணயிக்கப்படுகின்றது.

ஆனால் வருமான வரி முறைமையில் வருவாயின் மீதே வரி விதிக்கப்படுவதால், அதன் வீதாசரம் ஸகாத்தின் விகிதத்தை விட ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. ஒரு குறிப்பிடட வருமானம் ஒரு தடவையே வரிக்கு உட்பட்டிருந்தாலும், அந்த வருமானத்தின் முதலீட்டிலிருந்து பெறப்படும் ஏனைய அனைத்து வருமானங்களும் வரிக்கு உட்படும் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வருமான வரிக்கான மற்றும் ஸகாத்திட்கான வரம்பு (நிசாப்)
மேலே குறிப்பிட்டது போல, நிகர செல்வத்தின் மீதான ஸகாத்தின் பொறுப்புக்கான வரம்பு 84 கிராம் தூய (24 காரட்) தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதன் தற்போதைய பண மதிப்பு இலங்கை ரூபாய் இருபது மூன்று இலட்சமாகும்.

ஸகாத் கடமையாவதட்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தியானதன் பிறகு, நிசாப் வரம்பை விட அதிகமாக செல்வம் வைத்திருக்கும் ஒரு முஸ்லிம், அச்செல்வத்திற்கு ஸகாத் செலுத்த வேண்டும்.

அதேபோல், ஒரு தனிநபர் ஸகாத்தை கணக்கிட்டு செலுத்துவதே போன்று, நிறுவனங்களும் (கூட்டாண்மை அல்லது கம்பெனி) ஸகாத் செலுத்த வேண்டும், மேலும் ஒரு நிறுவனத்தால் செலுத்தப்படும் ஸகாத்தை கூட்டாளர் அல்லது பங்குதாரர் தனது மொத்த ஸகாத் பொறுப்புக்கு எதிராக வரவாகவோ அல்லது அத்தகைய ஸகாத்திற்குக் காரணமான செல்வத்தின் மொத்த நிகர செல்வத்தின் கணக்கீட்டிலிருந்தோ விலக்குக் கோரலாம்.

மாறாக வருமான வரியைப் பொறுத்தவரையில், தனி நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சமும் கூட்டாண்மைகளுக்கு ரூபாய் பத்து இலட்சமும் அனுமதிக்கப்படுகின்றது. ஏனைய எந்த தனி நபருக்கோ நிறுவனத்திற்கு இது போன்ற வரம்புகள் கிடையாது. அது போன்ற நிறுவனங்கள் ஈட்டும் நிகர இலாபங்கள் அனைத்தும் வரிக்குட்படும்.
ஸகாத் மற்றும் வரிகளை பகிர்தல்.

கடந்த பல தசாப்தங்களாக, நம் நாட்டில் அரசாங்கஙகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டன. ஆனால் நாடு முன்னேறுவதற்கு பதிலாக படிப்படியாக பொருளாதார இடர்களுக்குட்பட்டு இன்று பல பில்லியன் ரூபாய் வெளிநாட்டு கடனில் வேறு மூழ்கியுள்ளது. மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட மேற்படி கோடிக்கணக்கான வரிப்பணம் முறையாக பயன்படுத்தாப்படாமை மட்டுமன்றி அவை தவறாகவும் மோசமாகவும் பயன்படுத்தப்பட்டு வீணாக்கப்பட்டமையே இதற்கான காரணங்கள் என்றே குற்றம் சாட்டப்படுகின்றது.

ஸகாத்தைப் பொறுத்தவரை, ஸகாத் வசூலிப்பதை விட அதை பயன் படுத்தும் மற்றும் பகிரந்தளிக்கும் விதம் பற்றியே அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. ஏனெனில் ஸகாத்தை சேகரிப்பதை விட அதை பகிரந்தளிப்பதிலேயே அதிக முறைகேடுகள் ஏற்படலாம். ஸகாத் யாருக்கு, எதற்காக வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து இறை வழிகாட்டல்களும் நபியவர்களின் முன்மாதிரிகளும் உள்ளன.

அவ்வழிகாட்டுதல்களிலிருந்து விலக யாருக்கும் அதிகாரம் கிடையாது.
அதே சமயம் வருமான வரி முறையை நெறிப்படுத்த அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 148 மற்றும் 149 மூலம் கடும் கட்டுப்பாடுகளை வகுத்திருந்தாலும், அதில் ஊழல் மற்றும் முறைகேடுகள் ஊடுருவி அரசு வரியை சரியான விதத்தில் பயன் படுத்துவுதில் பொதுமக்களும் நம்பிக்கை இழந்துள்ளனர்.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த இஸ்லாமிய ஸகாத் முறை, நவீன வருமான வரி முறையுடன் இன்னும் இணக்கமாக உள்ளமை மிகவும் ஆச்சரியமானதே.

மற்றும் வருமான வரி ஆகியவை நிதி ஒழுங்குமுறை மற்றும் சமூக நலனில் தனித்துவமான ஆனால் இணையான பங்கை வகிக்கின்றன. இரண்டும் செல்வம் அல்லது வருமானத்தின் மீது நேரடி வரிகளாக இருந்தாலும், அவற்றின் அடிப்படை நோக்கங்கள், வசூல் முறைகள் மற்றும் பயன்பாடு கணிசமாக வேறுபடுகின்றன.

ஸகாத் என்பது செல்வத்தை சமூகத்தில் தேவையுடையவர்கள் மற்றும் வரியவர்கள் இடையே பகிர்தல் மற்றும் சமூக நீதியை நோக்கமாகக் கொண்ட ஏக இறைவனின் ஒரு முக்கிய கட்டளையாகும்.

மேலும் இக்கட்டளையை கடைபிடிப்பது முஸ்லிம்களிடையே தார்மீக மற்றும் ஆன்மீகப் பொறுப்புணர்வை மேம்பட துணை புறிகின்றது. அதற்கு நேர்மாறாக, வருமான வரிவிதிப்பு என்பது பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கும் அரசாங்க செயல்பாடுகளை நிலைநிறுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு அரசு விதிக்கும் கடமையாகும்.

இந்த இரு முறைமைகளிலும் முக்கிய வேறுபாடொன்று பொறுப்புக்கூறலில் காணப்படுகின்றது.

ஸகாத் என்பது சுய மதிப்பீடு, தனிப்பட்ட இறை நம்பிக்கை மற்றும் நெறிமுறை உறுதிப்பாட்டின் அடிப்படையில் சுயமாகவே பின்பற்றப்படுவதுடன், வருமான வரி முறைமையானது ஏய்ப்புக்கான முயற்சி மற்றும் அதற்கான அபராதங்கள் மற்றும் சிறை தண்டனைகள் போன்றவையை கொண்டது.

மேலும், ஸகாத் விநியோகம் சார்ந்த தெளிவான இறை ஆணைகள் திருக்குர்ஆனில் உள்ளன. இவை ஸகாத் சரியான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்கின்றன.

அதே சமயம், அரச கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட வருமான வரி முறைமை, அது அறிமுகப்படுத்தப்பட்டு பல தசாப்தங்கள் ஆகியுள்ள நிலையிலும் தவறான நிர்வாகம், முறைகேடுகள், ஊழல் மற்றும் மோசடிகள் பற்றிய கவலைகளையே தொடர்ந்தும் எழுப்பிய வண்ணமுள்ளது.

N.M.M மிப்லி (நளீமீ)
ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
mifly1234@gmail.com

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...