இதில் 59 வயதான மார்க் கார்னி 1,31,674 வாக்குகள் பெற்று 85.9 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கிறிஸ்டியா பிரீலாண்ட் 11,134 வாக்குகளும், கரீனா கோல்ட் 4,785 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி, கடந்த 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் கவர்னராக பதவி வகித்தார். அதோடு, 2011 முதல் 2018 வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
தேர்தலில் வெற்றியடைந்த மார்க் கார்னி கூறுகையில்,
நாங்கள் தயாரிக்கும் பொருட்கள், நாங்கள் விற்கும் பொருட்கள் மற்றும் எங்கள் வாழ்வாதாரத்தின் மீது ட்ரம்ப் நியாயமற்ற வரிகளை விதித்துள்ளார். அமெரிக்கா, கனடா அல்ல. கனடா ஒருபோதும், ஒருபோதும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்காது. அமெரிக்கா நம் இயற்கை வளங்களையும், குடிநீரையும், நிலத்தையும், கூடவே முழு கனடா நாட்டையும் அடக்கி ஆள விரும்புகிறது.
கனடா ஒருபோதும், எந்த வகையிலும், வடிவத்திலும் அமெரிக்காவின் திமிருக்கு அடிபணியாது. நாங்கள் ஒரு போதும் அமெரிக்காவின் மாகாணமாக இணைய மாட்டோம். அமெரிக்கர்கள் எங்களுக்கு மரியாதை காட்டும் வரை எனது அரசாங்கம் கட்டணங்களை குறைக்காது.
இது அவர்களுடைய நடவடிக்கையை பார்க்கும்போதே நமக்கு தெரிகிறது. ட்ரம்ப், கனடாவின் தொழிலாளர்களையும், குடும்பங்களையும், வணிகங்களையும் பாதிக்க வைக்கும் விஷயங்களை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்..
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சமாளிக்க மிகவும் நம்பகமான அரசியல்வாதியாக கனடா நாட்டு மக்கள் அவரை அங்கீகரிப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மார்க் கார்னி ஒருமுறை டொனால்டு ட்ரம்ப்பை ‘ஹாரி பாட்டர்’ கதையில் வரும் வில்லன் கதாபாத்திரமான வோல்டெமார்ட்டுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.