ஊடகங்கள் வாயிலாக சந்தேகம் பரப்புவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை: உலமா சபை அறிவிப்பு

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் குறித்து பேசப்பட்ட அண்மைய யூடியூப் காணொளி தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள அறிக்கை..

‘LONDON TAMIL TV’ என்ற யூடியூப் பக்கத்தில் வெளியான நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஐயூப் அஸ்மின் என்பவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட, அது தொடர்பில் பொறுப்புக் கூறப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

குறித்த காணொளியில் அவர் பலரது பெயர்களை சுட்டிக்காட்டியிருந்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களையும் குறிப்பிட்டு, அவர் தீவிரபோக்குகளை எதிர்த்து எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையென பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தினை தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாக கண்டிப்பதோடு இவ்வாறான சந்தேகங்களை தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்களை பரப்புவோர் விடயத்தில் பொதுமக்கள் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.

அத்துடன் துறைசார் நிபுணர்களது ஆலோசனைகளுக்கிணங்க இவ்விடயம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி ஜம்இய்யா ஆலோசித்து வருகிறது என்பதனையும் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையானது கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக எல்லாக் காலங்களிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு, சகவாழ்வு, சமூகங்களிடையிலான ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி வருவதோடு அதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி கடந்த 2015.07.23ஆம் திகதி ‘ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் முற்றிலும் இஸ்லாத்துக்கு முரண்பட்டவை’ என்ற பிரகடனத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் ஏனைய சமூக அமைப்புகளும் இணைந்து வெளியிட்டன.

மேலும், மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான ஜம்இய்யாவின் வழிகாட்டல்களும் நிலைப்பாடுகளும் என்ற ‘மன்ஹஜ்’ எனும் நூலில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுங்குவிதிகளை சம்பூரணமாக வழங்கியிருப்பதோடு ‘தீவிரவாதம் வேண்டாம்’ என்ற ஒரு நூலையும் வெளியிட்டு நல்லதொரு முஸ்லிம் பிரஜையாக வாழ்வதற்கான அத்தனை வழிகாட்டல்களையும் வழங்கி வந்திருக்கிறது.

அத்தோடு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற முன்னரே 2019.01.03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் குழுவொன்று அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த ஹேமஸ்ரீ பெர்னாண்டோ அவர்களை சந்தித்து தீவிரசிந்தனைப் போக்குடைய அமைப்புகள் குறித்த தகவல்களை வழங்கியதுடன் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுத்திருத்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னரும் ஜனாதிபதி ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்து அமர்வுகளிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும் பிரமுகர்கள் பல தடவைகள் சமுகமளித்து பங்களிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

மேற்குறித்த யூடியூப் காணொளியில் உள்ளது போன்று சந்தேகங்களை ஏற்படுத்தும் விடயங்களை பொதுவெளியில் பகிர்வதானது சமூகங்களிடையில் நல்லிணக்கம், சகவாழ்வு, ஒற்றுமைக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடாகும்.

நிச்சயமாக உண்மையும், நீதியும் ஒருநாள் வெல்லும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பிலான உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுதியாக நம்புகிறது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...