உலகத்தை சீராக நிர்வகிக்கும் பொறுப்பு மனித இனத்தைச் சார்ந்ததாகும். மனித இனம் ஒன்றாக இணைந்து நிறைவேற்ற வேண்டிய இந்தப் பாரிய பொறுப்புக்கு முன்னால் தனது சுய இலாபத்தை அடைந்து கொள்ள மனித இனமே மனித இனத்தை கொன்றொழிப்பது இந்தப் பூமிக் கிரகத்தையே அழித்தொழிப்பதற்கு ஒப்பானதாகும்.
இலங்கையில் அடிக்கடி நடைபெறும் இவ்வாறான சம்பவங்களில் ஆறு வருடங்களுக்கு முன்னர் நடந்த ஈஸ்டர் தாக்குதல் இந்த வகையில் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இந்த வன்முறைச் சம்பவத்தில் கிறிஸ்தவ சமூகம் இலக்கு வைக்கப்பட்டிருந்ததோடு அதன் பழி முஸ்லிம் சமூகத்தின் மீது போடப்பட்டது.
அதைத் தொடர்ந்து இலங்கையில் இஸ்லாமும் முஸ்லிம்களும் முற்றுகைக்கு உள்ளாகினர். அல் குர்ஆன் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இஸ்லாமிய நூல்களுக்கான தடைகள், குர்ஆன் மத்ரஸாக்கள் மீதான அடக்குமுறைகள், முஸ்லிம்களை எப்போதும் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதற்கான முயற்சிகள் என இந்த முற்றுகை பல வடிவங்கள் எடுத்து இன்னும் தொடர்கிறது.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியதில் சம்பந் தப்பட்டவர்கள் எனச் சொல்லப்படுபவர்களில் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, ராஜபக்ஷ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் பிள்ளயான் என பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களினதும் பெயர்களும் அடிபடுகின்றன.
இந்தத் தாக்குதலுக்கு நாட்டில் நிலவும் அரசியல் கலாச்சாரமும் பங்களித்திருப்பதாக இன்றைய (21) விசேட ஆராதனையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டிருந்தார்.
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலன்னறுவையில் நேற்று (20) நடந்த கூட்டத்தில் ஜனாதிபதியும் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும் இந்தத் தாக்குதலை வைத்து முஸ்லிம் தீவிரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பெயரில் இலங்கை முஸ்லிம்கள் இன்னும் இலக்குவைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் சமூகம் இணைந்து வெளியிட்ட அறிக்கை கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா உட்பட 17 முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், “ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவங்கள் பயங்கரவாதச் செயல்கள் மட்டுமல்ல, இஸ்லாத்தை அவதூறு செய்வதையும், முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதையும், நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களும் கர்தினால் அவர்களும் இந்தத் தாக்குதல் தெளிவாகவே அரசியல் நோக்கம் கொண்டவை எனக் குறிப்பிடும் நிலையிலும், இந்தத் தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம் சமூகத்தைச் சாராத பலரும் சம்பந்தப்பட்டிருப்பது தெளிவாகி வரும் நிலையிலும் இந்தத் தாக்குதலை முன்னிறுத்தி முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் நெருக்குவாரங்களுக்கு முஸ்லிம் சிவில் சமூகம் சுட்டிக் காட்டியிருக்கின்ற காரணங்களைத் தவிர வேறு நியாயங்கள் இருக்க முடியாது.
இந்த நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீதான இனிவரும் அடக்குமுறைகள் முஸ்லிம் சிவில் சமூகக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியுள்ள காரணங்களுக்காகவே என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி யாராக இருந்தாலும் சொல்லப்படும் அரசியல் காரணங்கள் எதுவாக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை ஈஸ்டர் தாக்குதலுக்குரிய காரணம் என்ன என்பது தெளிவாக தெரிந்திருக்கிறது என்பதுவே ஈஸ்டர் தாக்குதலின் ஆறாவது வருடம் சொல்லும் செய்தியாக இருக்கிறது.
எழுதிச் செல்லும் விதியின் கை இனி இதைத்தான் விதியாக எழுதுமாக இருந்தால் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் இந்த நாட்டில் இனிப்பானதாக இருக்கப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
உலகத்தை சீராக நிர்வகிக்கும் பொறுப்பு முழு மனித இனத்தையும் சார்ந்ததாகும். மனித இனம் ஒன்றாக இணைந்து நிறைவேற்ற வேண்டிய இந்தப் பாரிய பொறுப்புக்கு முன்னால் தனது சுய இலாபத்தை அடைந்து கொள்ள மதத்தையோ இனத்தையோ பயன்படுத்தி மனித இனமே மனித இனத்துக்கு எதிராகச் செயற்படுவது இந்தப் பூமிக் கிரகத்தையே அழித்தொழிப்பதற்கு ஒப்பானதாகும்.