ஈஸ்டர் திருநாளையொட்டி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மக்களை நேரடியாகச் சந்தித்தார்.
மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு, போப் பிரான்சிஸ் முதன் முதலில் பொதுவெளியில் தோன்றி மக்களை சந்தித்தார்.
வத்திக்கான் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.
வத்திக்கான் மக்களை மட்டுமின்றி உலக மக்களின் நலனையும் போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
உலக அமைதி, ஆயுதக் குறைப்பு, உலகம் முழுவதுமுள்ள கைதிகளை விடுவிப்பது உள்ளிட்டவற்றுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
போராலும் முடிவில்லாத வன்முறையாலும் புனித பூமி காயப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதிக அளவிலான பலிகள் மற்றும் பாதிப்பு ஏற்படுவதாக காஸாவையும் குறிப்பிட்டார்.
‘காசாவின் நிலைமை பரிதாபகரமானது. பசியால் வாடும் மக்களுக்கு உதவ நாம் முன்வர வேண்டும். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் துன்பப்படும் மக்களுடன் தனது எண்ணங்கள் இருப்பதாக கூறினார்.
காஸா எல்லையில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் பணயக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்று சேர வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.
போப் பிரான்சிஸ் , சுவாசக் கோளாறு காரணமாக பெப்ரவரி 14ஆம் திகதி மருத்துவமனைக்குச் சென்ற அவர், 38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23 அன்று வத்திக்கான் திரும்பினார்.
இதனிடையே அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸை சந்தித்தார்.
இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ள வான்ஸ், வாத்திகான் வெளியுறவுத் துறை அமைச்சரை நேற்றுமுன்தினம் சந்தித்த நிலையில், ஈஸ்டர் திருநாளையொட்டி போப் பிரான்சிஸையும் சந்தித்தார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு சில நிமிடங்களுக்கு மட்டுமே நடந்ததாக வத்திகான் அரசு குறிப்பிட்டுள்ளது.
இதில், புலம்பெயர்தல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் நிர்வாகத் திட்டம் உள்ளிட்டவை குறித்து பேசியதாகத் தெரிகிறது.
இந்த சந்திப்பில் வான்ஸிடம் புலம்பெயர்ந்தோரின் மீதான அக்கறையை பிரான்சிஸ் வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஈஸ்டர் திருநாளில் போப் பிரான்சிஸை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக ஜே.டி. வான்ஸ் குறிப்பிட்டுள்ளார். துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் 2019ஆம் ஆண்டு கிறிஸ்தவத்தில் இருந்து கத்தோலிக்க பிரிவுக்கு மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.