ஊடகங்கள் வாயிலாக சந்தேகம் பரப்புவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை: உலமா சபை அறிவிப்பு

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் குறித்து பேசப்பட்ட அண்மைய யூடியூப் காணொளி தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள அறிக்கை..

‘LONDON TAMIL TV’ என்ற யூடியூப் பக்கத்தில் வெளியான நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஐயூப் அஸ்மின் என்பவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட, அது தொடர்பில் பொறுப்புக் கூறப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

குறித்த காணொளியில் அவர் பலரது பெயர்களை சுட்டிக்காட்டியிருந்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களையும் குறிப்பிட்டு, அவர் தீவிரபோக்குகளை எதிர்த்து எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையென பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தினை தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாக கண்டிப்பதோடு இவ்வாறான சந்தேகங்களை தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்களை பரப்புவோர் விடயத்தில் பொதுமக்கள் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.

அத்துடன் துறைசார் நிபுணர்களது ஆலோசனைகளுக்கிணங்க இவ்விடயம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி ஜம்இய்யா ஆலோசித்து வருகிறது என்பதனையும் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையானது கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக எல்லாக் காலங்களிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு, சகவாழ்வு, சமூகங்களிடையிலான ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி வருவதோடு அதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி கடந்த 2015.07.23ஆம் திகதி ‘ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் முற்றிலும் இஸ்லாத்துக்கு முரண்பட்டவை’ என்ற பிரகடனத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் ஏனைய சமூக அமைப்புகளும் இணைந்து வெளியிட்டன.

மேலும், மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான ஜம்இய்யாவின் வழிகாட்டல்களும் நிலைப்பாடுகளும் என்ற ‘மன்ஹஜ்’ எனும் நூலில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுங்குவிதிகளை சம்பூரணமாக வழங்கியிருப்பதோடு ‘தீவிரவாதம் வேண்டாம்’ என்ற ஒரு நூலையும் வெளியிட்டு நல்லதொரு முஸ்லிம் பிரஜையாக வாழ்வதற்கான அத்தனை வழிகாட்டல்களையும் வழங்கி வந்திருக்கிறது.

அத்தோடு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற முன்னரே 2019.01.03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் குழுவொன்று அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த ஹேமஸ்ரீ பெர்னாண்டோ அவர்களை சந்தித்து தீவிரசிந்தனைப் போக்குடைய அமைப்புகள் குறித்த தகவல்களை வழங்கியதுடன் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுத்திருத்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னரும் ஜனாதிபதி ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்து அமர்வுகளிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும் பிரமுகர்கள் பல தடவைகள் சமுகமளித்து பங்களிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

மேற்குறித்த யூடியூப் காணொளியில் உள்ளது போன்று சந்தேகங்களை ஏற்படுத்தும் விடயங்களை பொதுவெளியில் பகிர்வதானது சமூகங்களிடையில் நல்லிணக்கம், சகவாழ்வு, ஒற்றுமைக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடாகும்.

நிச்சயமாக உண்மையும், நீதியும் ஒருநாள் வெல்லும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பிலான உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுதியாக நம்புகிறது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...