பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை முன்னிறுத்திய பிரதமர் மோடியின் சவூதி விஜயம்!

Date:

இலங்கைக்கு விஜயம் செய்து விட்டுத் திரும்பும் வழியில் ராமர் பாலத்தைக் கண்ணுற்ற இந்தியப் பிரதமர் மோடி, அயோத்தியில் சூரிய திலகம் அதே நேரம் நிகழ்வதை உடனிகழ்வாகக் குறிப்பிட்டிருந்தார். அதேபோல பிரதமர் மோடியின் சவூதி விஜயத்தின் போதான உடனிகழ்வாக பஹல்கம் தாக்குதல் நடந்திருக்கிறது.

இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி சவூதியின் ஜித்தாவில் பிரதமர் மோடி தரையிறங்கினார். 40 வருடங்களுக்கு முன் விஜயம் செய்த இந்திரா காந்திக்குப் பின்னர் முதற்தடவையாக பிரதமர் மோடி ஜித்தா சென்றடைந்தார்.

ஜித்தா புனிதஸ்தலங்கள் இரண்டையும் உள்ளடக்கிய சமய முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். சவுதியின் 2030 விஷனில் ஜித்தா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

2019 இல் நிறுவப்பட்ட இந்திய சவூதி மூலோபாய பங்காளர் கவுன்சிலில் (SPC) இந்தியப் பிரதமர் மோடியும் சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மானும் இணைத் தலைவர்கள். அரசியல், பாதுகாப்பு, கலாச்சார ஒத்துழைப்பு, பொருளாதார, மூலதன ஒத்துழைப்பு ஆகிய பகுதிகளில் இந்தக் கவுன்சில் கவனம் செலுத்துகிறது.

பிரதமர் மோடியின் இந்தச் சந்திப்பு இந்தத் தொடரில் மூன்றாவதாகும். இந்தச் சந்திப்பில் கவுன்சிலின் முன்னேற்றம் ஆராயப்படுவதோடு டிஜிட்டல் கட்டமைப்புக்கள், பாதுகாப்பு உபகரணங்களிலான புதிய வாய்ப்புக்களும் பேசப்படும்.

அமெரிக்காவுடனான விரிசலால் இராணுவ சமநிலையை பேணுவதில் சவுதிக்கு இருந்து வரும் இடைவெளியை இந்தியா நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது சவூதியிலேயே பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பதாகவும் அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு விவகாரங்களில் இரு தரப்பும் ஏற்கனவே கூட்டு நடவடிக்கைகள், கொள்வனவு ஒப்பந்தங்கள், நிறுவன ரீதியான ஒப்பந்தங்கள் பலவற்றிலும் ஈடுபட்டுள்ளன. கடந்த வருடம் இரு நாடுகளும் இணைந்து ராஜஸ்தானின் சதா தன்ஸீக்கில் தரைவழி இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டது.

தொடர்ந்து அல் முஅஹ்ஹத் அல் ஹிந்தி என்ற பெயரில் கடல் வழி இராணுவப் பயிற்சியிலும் ஈடுபட்டது. கடந்த வருடம் முதற் தடவையாக 225 மில்லியன் டொலர் ஆர்டிலரி ஷெல் விநியோகத்துக்கான ஒப்பந்தமொன்றிலும் இந்திய அரச சார்பு நிறுவனமான Munitions India Limited (MIL) இறங்கியது.

குறைந்து வரும் சவுதியின் எண்ணெய் வளத்துக்குப் பகரமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் green hydrogen energy புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கைச்சாத்திட்டன.

சவூதியில் உள்ள 2.7 மில்லியன் இந்திய டயஸ்போறாக்களின் நலனை கவனிப்பதும் விஜயத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். வெளிநாடுகளில் சிறையில் இருக்கும் இந்தியர்களில் 25 வீதத்துக்கும் மேல் சவூதி சிறைகளிலேயே இருக்கிறார்கள். இவர்களது நலனும் பேச்சுவார்த்தைகளில் உள்ளடக்கப்படுவதாகத் தெரிகிறது.

மோடி-எம்பிஎஸ் பேச்சுவார்த்தைகளில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்தியா-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC ) சுதந்திர வர்த்தக ஒப்பந்தமும் (FTA ) உள்ளடக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜிசிசி கூட்டமைப்பு இந்தியாவிற்கு ஒரு மூலோபாய பொருளாதார மண்டலத்தைப் கொடுக்க வல்லது. இதன் மூலமாக சவுதியில் இருக்கும் மில்லியன் கணக்கான இந்தியர்களை பலப்படுத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கிறது.

சவூதி அரேபியா இந்தியாவில் 10 பில்லியன் டொலருக்கு மேல் முதலீடு செய்துள்ளது. அண்மைக் காலங்களில் தனியார் முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிடப்பட்ட தனது வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய சவுதி அரேபியாவை இந்தியா அழைத்துள்ளது.

கடந்த ஆண்டில் சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 14 சதவீதத்தையும், அதன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 18 சதவீதத்தையும் இறக்குமதி செய்ததால், இந்தியா சவூதி அரேபியாவின் முக்கிய எரிசக்தி பங்காளியாக மாறியுள்ளது.

2023-24 நிதியாண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகப் பெறுமதி ம் சுமார் $42 பில்லியனாகும். இதில், சவூதி அரேபியாவிற்கான இந்திய ஏற்றுமதி அண்ணளவாக $11 பில்லியனாகும், இதில் பொறியியல் பொருட்கள், அரிசி மற்றும் பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களுடன் ரசாயனங்கள், உணவு மற்றும் மருத்துவ பொருட்களும் ஆடைகளும் அடங்கும்.

கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, உரங்கள், ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகள் உட்பட இந்தியாவிற்கான சவுதியின் ஏற்றுமதி $8.2 பில்லியன் ஆகும்.

சவூதியுடனான பல்வேறு உடன்படிக்கைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் அதிகம் பேசப்பட்ட நிலையில் இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் பஹல்காமில் நடந்த தாக்குதலையடுத்து இந்திய பிரதமர் உடனடியாக நாடு திரும்ப வேண்டியேற்பட்டது.

பிரதமர் மோடியின் சவூதி விஜயத்துக்கு முன்னர் இம்முறை குறைக்கப்பட்ட ஹஜ் கோட்டாவை அவர் மீளவும் பெற்று வருவார் என இந்திய ஊடகங்கள் ஆர்ப்பரித்தன.

இந்தியர்கள் இந்திய ஹஜ் கமிட்டி மற்றும் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் 1.75 லட்சம் பேருக்கு ஹஜ் பயணத்துக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் சுமார் 1.22 லட்சம் பேருக்கான அனுமதி ஹஜ் கமிட்டிக்கும் மீதமுள்ள நபர்களுக்கான (சுமார் 52,500 பேர்) அனுமதி தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தனியார் நிறுவனங்களின் ஒதுக்கீட்டை செளதி அரேபிய அரசாங்கம் ரத்து செய்து, பின்னர் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் மீளவும் அனுமதி வழங்கியுள்ளது. குறைவாகிய 42,500 பேருக்குமென பிரதமர் மோடி கோட்டாவை அதிகரித்துப் பெற்றெடுப்பார் என ஊடகங்கள் சொன்னவிதத்தில் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

பறிக்கப்பட்ட வக்ப் உரிமைகளுக்காக போராடி வரும் இந்திய முஸ்லிம்களுக்கு இந்திய பிரதமரின் சவூதி அரேபிய விஜயம் எதனையும் கொடுத்ததாகவும் தெரியவில்லை.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...