பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக வெள்ளிக்கிழமை (25) இரவு மூடப்பட்டது.
இந்நிலையில், திருவுடல் தாங்கிய பேழை இன்று சனிக்கிழமை (26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை, இன்றையதினம் இலங்கை உள்ளிட்ட உலகநாடுகளில் கத்தோலிக்க மக்கள் துக்கதினம் அனுஷ்டிப்பதுடன் பல ஆலயங்களில் இரங்கல் திருப்பலிகளும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
வத்திக்கானில் இடம்பெறவுள்ள பாப்பரசரின் நல்லடக்க ஆராதனைகளில் வத்திக்கானின் உயர் நிலை அதிகாரிகள் மற்றும் பாப்பரசரின் குடும்ப உறுப்பினர்களில் சிலர் மாத்திரமே கலந்துகொள்ளவுள்ளனர்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக மூடப்பட்டதையடுத்து, புனித பேதுரு பேராலயத்தின் உறுப்பினர்கள் பாப்பரசரின் திருவுடல் பேழைக்கு அருகில் இருந்து நல்லடக்கம் இடம்பெறும் வரை பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.
இதற்காக புனித மேரி பேராலயத்தில் அவர் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்துக்கு அருகே எளிய முறையிலான கல்லறை ஒன்று தயாராகி வருகிறது.
அவரது பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் கடந்த 23ஆம் திகதி முதல் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.